உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற வேறுபாடுகளையும் கடந்து, ஒரே நாட்டின் மக்களாக ஒன்றிணைந்து வாழும் புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்கியிருக்கிறோம். இனவாத அரசியலுக்கு இனி இந்த நாட்டில் இடமளிக்கப் போவதில்லை” என ஜனாதிபதி தெரிவித்தார்.

நிந்தவூரில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற கலாச்சார மண்டப புனர்நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எல்லா மக்களும், எல்லா மாகாணங்களும் ஒன்றிணைந்து அமைத்த அரசாங்கம்தான் இது. ஏன் இந்த அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை எங்களுக்கு வழங்கினீர்கள் என்று நான் மக்களிடமே கேட்க விரும்புகிறேன். கடந்த காலங்களில் பல அரசாங்கங்கள் இனவாதத்தை வளர்த்து அதன்மூலம் ஆட்சியை முன்னெடுத்தன. ஆனால் அந்த இனவாத அரசியலை மக்கள் தோற்கடித்து எங்களது அரசாங்கத்தை நிறுவியுள்ளனர்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், “ஒன்றரை வருடங்களாக எங்கள் அரசாங்கம் எந்தவித இன அச்சமுமின்றி, வேறுபாடுகளின்றி, பாதுகாப்பான மற்றும் ஒற்றுமைமிக்க ஆட்சியை முன்னெடுத்து வருகிறது. இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத தூய்மையான நிர்வாகத்தை உருவாக்க மக்களே எங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்” என்றார்.

“நான், எனது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பொதுமக்களின் பணத்தில் ஒரு சதமேனும் வீண்விரயம் செய்யமாட்டோம் என இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் முன்னிலையில் உறுதியளிக்கிறேன்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

சட்டத்தை மதிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, “கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பல துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டன. அவற்றுக்கு எதிராக பேச முடியாத நிலை மக்களிடம் காணப்பட்டது. இன்று மக்களே அதிகாரம் பெற்றுள்ளனர். அந்த அதிகாரத்தின் அடிப்படையில் கடந்த காலங்களில் நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என கூறினார்.

“முன்னாள் ஜனாதிபதிகள் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர். சிலர் நீதிமன்றங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுபோன்ற நிலைமைகள் அரிது. ஆனால் எங்கள் அரசாங்கம் சட்டத்தை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துகிறது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“கீழ்த்தர மக்களுக்கு ஒரு சட்டம், உயர்ந்தவர்களுக்கு வேறு சட்டம், அரசியல் அதிகாரம் உள்ளவர்களுக்கு தனி சட்டம் என்ற நிலை இனி இருக்காது. சட்டம் அனைவருக்கும் சமமானது. நாட்டை கட்டியெழுப்ப இதுவே அவசியம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு முப்படையினர்களின் உயர் அதிகாரிகள் பொலிஸார், இதர பாதுகாப்பு தரப்பினர் நவீன ஆயுதங்கள், ட்ரோன், கவச வாகனங்களின் உதவியுடன் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் மஞ்சுள, திகாமடுல்ல, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல் பாசித், தாஹிர், உதுமாலெப்பை, கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்ட செயலாளர், மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0