மேர்வின் சில்வா சொத்துக் குற்றச்சாட்டு வழக்கு மீண்டும் விசாரணை.!
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது சட்டவிரோதமாக சொத்துகளைச் சேர்த்ததாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
கடந்த 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அமைச்சராகப் பணியாற்றிய போது, தனது சட்டபூர்வ வருமானத்தை விட அதிகமாக சுமார் 150 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகளை சட்டவிரோதமாக ஈட்டியதாக மேர்வின் சில்வா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் வழிநடத்தலின் கீழ் வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் செய்ததாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் சாட்சிப் பதிவுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.