எரிபொருள் வரிசைகள் அரசின் திட்டமிட்ட நடவடிக்கை – சாகர காரியவசம் குற்றச்சாட்டு.!
எவ்வித உலகளாவிய நெருக்கடிகளும் இல்லாத சூழ்நிலையில் அரசு திட்டமிட்டு எரிபொருள் வரிசைகளையும் கியூ.ஆர். குறியீட்டு முறையையும் உருவாக்கி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது என ஜனாதிபதி இளம் தொழில்முனைவோரிடம் அளித்த உறுதிமொழி ஒரு வாரத்திலேயே தவறானதாக மாறிவிட்டதாகவும், தொழில்முனைவோரின் முக்கியத்துவம் குறித்து அடிப்படைப் புரிதல் கூட இல்லாத நிலையில் நாட்டை வழிநடத்துவது கவலைக்குரியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்று மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகளின் காலத்திலும் மக்களுக்கு தடையின்றி உணவு மற்றும் எரிபொருள் வழங்க கடந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் தற்போது அத்தகைய நெருக்கடிகள் இல்லாத நிலையிலும் அரசின் நிர்வாகத் திறமையின்மையால் மக்கள் மீண்டும் வரிசைகளில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான வழக்கில் சாட்சியாளரை அச்சுறுத்தி அரசியல்வாதிகளின் பெயர்களை உள்ளடக்கி வாக்குமூலம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இலஞ்ச ஊழல்ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒரு அரசியல் இயக்கத்துடன் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டிய நந்தன குணதிலக்க மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.நாட்டில் ஜனநாயகம் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருவதாகவும், போலியான சாட்சியங்களை உருவாக்கி அரசியல் எதிரிகளைச் சிறையில் அடைக்கும் அபாயகரமான போக்கு அரசால் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்தார்.