புலோலியில் பாரம்பரிய கூட்டுறவு உணவகம் திறந்துவைப்பு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவு பாரம்பரிய உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு மங்களச் சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து சைவ மற்றும் கிறிஸ்தவ இறை வணக்கங்கள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் ஆசி உரையாற்றினார். பின்னர் கூட்டுறவு பாரம்பரிய உணவகக் கட்டிடத்தை யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மற்றும் ஆரம்ப நிதியாக 28 இலட்சம் ரூபா வழங்கியிருந்த யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் பிரதிநிதியான பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் சிறிகண்ணன் ஸ்ரீ பிரகாஷ் ஆகியோர் இணைந்து சம்பிரதாய முறையில் திறந்து வைத்தனர்.
பின்னர் கட்டிடத்தின் திறப்புச் சான்று புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் வரவேற்பு நடனம், வரவேற்புரை ஆகியன இடம்பெற்றதுடன் தலைமை உரையை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுக்கதீஸ், பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல், வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர் பத்மநாதன், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள், கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர், இயக்குநர்கள், பணியாளர்கள், பருத்தித்துறை பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரி, நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த உணவகத்திற்கான தொடக்க நிதியாக யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் 28 இலட்சம் ரூபாவையும், புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கம் 40 இலட்சம் ரூபாவையும் வழங்கியிருந்ததுடன், பருத்தித்துறை சமுர்த்தி வங்கி உணவகத்திற்குத் தேவையான உபகரணங்களுக்காக இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதியையும் வழங்கியுள்ளது.