வடக்கு மாகாணத் தேர்தல் நிலை: ஜனாதிபதி ஏன் காலம் தாழ்த்துகிறார்? – மனோ கணேசன் கேள்வி.!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்திருந்தது, ஆனால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் ஏன் அதே தேர்தலை நடத்த முடியாதிருக்கிறாரோ என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் கூறியதாவது:
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே போரை முன்னெடுத்தவர். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களில் அவர் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் இருந்தும், அவர் அப்போதைய காலகட்டத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் இன்று, வடக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கதேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன்? ஜனாதிபதி வடக்கு மாகாணத்துக்குச் செல்கின்றார், மக்களுடன் சுதந்திரமாக நடந்து, புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார். இதில் எவ்வித தவறும் இல்லை.
இதற்கிடையில், இந்த ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியால் ஏன் தேர்தலை நடத்த முடியவில்லை என்பது எனது கேள்வியாகும். இது மிகவும் நியாயமான கேள்வி அல்லவா?”மனோ கணேசன் தனது கருத்தை வெளிப்படுத்தி, அரசியலில் உள்ள முரண்பாடுகளைக் கண்டுபிடித்து, ஜனாதிபதி நடவடிக்கைகளில் தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கின்றார்.