பெற்றோலிய கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மீது ஊழல் வழக்கு – மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு.!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டது.
சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை கிடைக்கும் போது, அந்த நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மேல் நீதிமன்றத்தின் அழைப்பாணை கிடைக்கும் போது சந்தேகநபரை அங்கு முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட வேண்டுமென இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.மேலும், இந்த விடயம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் படி, 2017 – 2018 காலப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய கோரப்பட்டிருந்த மூன்று நீண்டகால ஒப்பந்தங்களை ரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையில் 27 உடனடி ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய்நட்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு துணையாக இருந்ததாகவும் சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.