நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள், வீதியோரக் கடைகளில் விசேட சுகாதாரச் சோதனை.!
நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் மற்றும் வீதியோரக் கடைகளில் விசேட சுகாதாரப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் பணிப்புரையின்பேரில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இன்று மாலை இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை, சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம், சமையலறை வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
முன்னதாகவும் இவ்வாறான விசேட சுற்றிவளைப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும், மனித பாவனைக்கு உதவாத தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.