உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வடக்கு நிர்வாகத்தில் டிஜிட்டல் யுகம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், கற்றல் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் பயிற்சி முகாமைத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை கிளிநொச்சியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இப்புதிய கட்டமைப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், இது வெறுமனே ஓர் இணையத்தளத்தையோ அல்லது மென்பொருளையோ ஆரம்பித்து வைக்கும் நிகழ்வல்ல எனவும், வடக்கு மாகாண நிர்வாகத்தின் எண்ணிய ஆளுகையின் புதிய யுகத்தின் ஆரம்பம் எனவும் தெரிவித்தார்.

பாரம்பரிய நிர்வாக முறைமைக்கும், எண்ணியமயப்படுத்தப்பட்ட உலகத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளுக்கும் இடையிலான இடைவெளியை இணைக்கும் ஒரு பாலமாக இத்திட்டம் அமைந்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய எண்ணியமயமாக்கல் கொள்கையுடன் ஒன்றிணைந்ததாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக, தொழில்சார் மேம்பாட்டுக்குத் தடையாக இருக்கும் பௌதிக ரீதியான தடைகள் தகர்க்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட ஆளுநர், “யாழ்ப்பாணம், கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவு என ஒரு அதிகாரி எங்கு கடமையாற்றினாலும், உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வளங்களை இனி அவர்கள் தமது விரல் நுனியில் பெற்றுக்கொள்ள முடியும். இது ஒரு தொழில்நுட்ப மேம்பாடு என்பதை விட மேலானது. எமது மிக முக்கியமான சொத்தான ‘மனித வளத்தின்’ மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு மூலோபாய முதலீடாகும். தொழில்நுட்ப அறிவுள்ள, சுறுசுறுப்பான மற்றும் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ள ஒரு அரச உழைப்பாளர் படையை நாம் இதன்மூலம் உருவாக்கி வருகின்றோம்.” – என்றும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த ஆளுநர், “கால ஓட்டத்துக்கு ஏற்ப அரச நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைப் புகுத்துவதில் பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்) செ.பிரணவநாதன் முன்னிலையில் இருக்கின்றார். அவரது இந்தச் சிறப்பான செயற்பாட்டை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அதேபோன்று, முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனம் கிளிநொச்சியில் அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ‘எல்லாமே யாழ்ப்பாணத்தில்தான் அமைய வேண்டும்’ என்ற சிந்தனையை நாம் மாற்றியமைக்க வேண்டும்.” – என்றும் வலியுறுத்தினார்.

அரசின் எண்ணியமயமாக்கல் கொள்கையூடாக அரச சேவையிலுள்ள தாமதங்கள் மற்றும் ‘சிவப்பு நாடா முறைமைக்கு’ முற்றுப்புள்ளி வைக்கப்படுவது மட்டுமன்றி, ஊழல் மற்றும் இலஞ்சம் போன்ற சீர்கேடுகளும் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இப்புதிய கட்டமைப்புகளை வெறும் ‘கருவிகளாக’ அல்லது ‘கடமைகளாக’ மட்டும் பார்க்காது, நிர்வாக மாற்றத்துக்கான வினையூக்கிகளாகக் கருதிச் செயற்படுமாறு அரச அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட ஆளுநர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களின் திறனைப் பொறுத்தே அத்தொழில்நுட்பத்தின் வெற்றியும் அமையும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், மாகாணத்தின் முன்னேற்றத்துக்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பே இயந்திரமாகச் செயற்படுகின்றது எனக் குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தை நனவாக்குவதற்கு அயராது உழைத்த முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் இணையத்தள அபிவிருத்திக் குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்) செ.பிரணவநாதன், இந்த இணையக் கட்டமைப்புகளின் உருவாக்கம் மற்றும் அதனூடாக எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தினார். முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தனது வரவேற்புரையில், நிறுவனத்தின் செயற்பாடுகளுக்காக இந்த ஆண்டு கடந்த காலங்களை விட 4 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன், பிரதிப் பிரதம செயலாளர்கள், முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

19 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

48 0 0