உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 37 வினாடிகள் முன்
1 பார்வைகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்வி கலாச்சார பிரிவு ஏற்பாடு செய்த மன்னார் மாவட்டத்தில் சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெற்ற மற்றும் உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (28) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

மேலும், விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் தாஹீர் மரைக்கார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மது, மன்னார் நகர முதல்வர், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சாதணையாளர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் விருந்தினர்கள் மற்றும் சாதனையாளர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மேலைத்தேய இசை வாத்தியத்துடன் நகரசபை மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 117 சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,
பெற்றோர்களைக் கடைசி வரை கண்ணியப்படுத்துகின்றவர்களாக அவர்களை பார்க்கின்றவர்களாக நாம் எம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும். சில பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்ற பெரிய பெரிய கல்விமான்களை நாங்கள் பார்க்கிறோம். அவ்வாறான நிலை எங்களுடைய மாவட்டத்தில் யாருடைய பெற்றோர்களுக்கும் வந்து விடக்கூடாது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் அழகான மாவட்டம். கத்தோலிக்க மக்களையும், இந்து மக்களையும், இஸ்லாமிய மக்களையும் கொண்டிருக்கின்ற இந்த நாட்டிலே இருக்கின்ற ஒரு அழகான சர்வதேச தீவுதான் மன்னார் மாவட்டம்.

இந்த மாவட்டம் ஒரு காலத்திலே மிகவும் கஷ்டமான பிரதேசமாகவும், அகதிகள் நிறைந்து வாழுகின்ற பிரதேசமாகவும் இருந்தது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அதிகமான மக்கள் இந்தியாவிலும், புத்தளம், அனுராதபுரம் போன்ற மாவட்டங்களிலும் வாழ்ந்த வரலாறு இருக்கிறது.

நானும் எனது சமூகம் சார்ந்தவர்களும் மன்னாரில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.

அவ்வாறு அகதிகளாக இருந்த பொழுது தான் இந்த அரசியலுக்குள் வரக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அவ்வாறு அரசியலுக்குள் வருகின்ற பொழுது, மன்னாரிலே வந்து தேர்தல் வாக்கு கேட்கின்ற ஒரு நிலை எனக்கு இருக்கவில்லை.

வவுனியாவில் அல்லது நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முல்லைத்தீவு மாவட்டத்திலோ போய் தேர்தல் வாக்குகளை கேட்கின்ற சூழல் எனக்கு இருக்கவில்லை.

புத்தளத்தில் நூற்றுக்கணக்கான அகதி முகாம்களில் இருந்த அந்த மக்கள் ஒரு தேர்தல் வந்த பொழுது, அங்கே வாக்களிக்கின்ற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த குடிசைகளுக்கு உள்ளே இருக்கின்ற ஒரு 28 வயது வாலிபனான என்னை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அந்த அகதி முகாமில் இருந்த மக்கள் என் மீது நம்பிக்கை கொண்டு இறைவனுடைய உதவியினால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கினார்கள்.

அதன் பிறகு ஒரு கட்சி அமைத்து அமைச்சராகி ஒரு அதுவும் புனர்வாழ்வு பொறுப்பான அமைச்சராக இருக்கின்ற பொழுது 2009-லே இந்த யுத்தம் முடிந்த பிறகு மெனிக் பாமிலே மூன்று நான்கு லட்சம் மக்கள் அகதிகளாக முள்ளுக்கம்பி வேலிக்குள்ளே அடைக்கப்பட்டிருந்த ஒரு காலம்.

தனியாக இங்கிருந்து கடலின் ஊடாக வெளியேற்றப்பட்ட போதிலும், அங்கிருந்து வருகின்ற பொழுது அமைச்சராக வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தை இறைவன் எனக்கு ஏற்படுத்தினான். அவ்வாறு வந்த பொழுது எல்லா மக்களையும் ஒரே கண்ணால் பார்த்தேன்.

இங்கு பேருந்து நிலையம் இருக்கவில்லை, கச்சேரி இருக்கவில்லை, மன்னார் பாலம் இருக்கவில்லை அதாவது இப்பொழுது இருக்கின்ற பாலம் இருக்கவில்லை. அதேபோல் இந்த மன்னார், தலைமன்னார் பாதை இருக்கவில்லை.

மரிச்சிக்கட்டி வரையான பாதை இருந்தது இவ்வாறு இருக்கவில்லை. மன்னார் சங்குப்பட்டியின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கான பாதை இருந்தது இவ்வாறு இருக்கவில்லை.

அதிகமான கிராமங்களில் மின்சாரம் இருக்கவில்லை, மாந்தை மேற்கு, மடு, நானாட்டானில் ஒரு சிறு பகுதி முசலி பிரதேசம் முற்றாக அழிந்து காணப்பட்ட பிரதேசமாக இருந்தது. ஒரு கட்டிடங்களை நாங்கள் காணவில்லை, ஒரு பிரதேச செயலகம் இருந்த இடம் தெரியாமல் இருந்தது. யாருடைய காணி, யாருடைய வீடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருந்தது.

அந்தக் காலத்திலே தான் நானும் ஒரு அமைச்சராக இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருக்கக்கூடிய வாய்ப்பை இறைவன் எனக்கு மக்களுடைய உதவியோடு ஏற்படுத்தினான்.

ஒரு திட்டமிடலின் ஊடாகத்தான் இந்த மக்களைக் கொண்டு வந்து முதலில் குடியமர்த்தி, கண்ணிவெடி அகற்றி, மின்சாரம் வழங்கி, குடிசைகள் அமைத்து, அதன் பிறகு தண்ணீர் ஏற்பாடு செய்து, வாழ்வதற்கான சாப்பாட்டு ஏற்பாடுகளைச் செய்து அதன் பிறகு ஒவ்வொரு திட்டமாகச் செய்து இன்று எல்லா கிராமங்களும் உயர் மக்கள் வாழுகின்ற கிராமங்களாக மாற்றினேன். சமுர்த்தி திட்டம் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டம் இருந்தது.

எனவே இந்த பிரதேச இளைஞர்களுக்கு இந்த சமுர்த்தி நியமனங்கள் வழங்கி அதன் ஊடாக சமுர்த்தி திட்டத்தை வழங்கி வாழ்வாதாரத்தை வழங்கினோம்.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கு நிறுவனங்கள் ஊடாக நிதியை கொண்டு வந்து பல மாடிக் கட்டிடங்கள், அதேபோல் மாந்தையிலே, மடுவில் எந்தக் கட்டிடங்களும் பாடசாலையில் இல்லாத பொழுது எல்லாவற்றையும் அவசர அவசரமாகச் செய்ததனுடைய விளைவுதான் இன்று இந்தக் கல்விச் சமூகத்தை நாங்கள் பார்க்கிறோம்.

300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 3A, 9A எடுத்தவர்கள் இந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களில் 117 பேர் இன்று கௌரவப்படுத்தப்படுகிறார்கள் என்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

எனவே உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்களாக இருக்கலாம், வறுமையாக இருக்கலாம் அல்லது வேறு சவால்களாக இருக்கலாம் எல்லா விஷயங்களிலும் எங்களுடைய இலக்கை நாங்கள் மறந்து விடக் கூடாது.

நாங்கள் ஒரு பயணம் மேற்கொண்டிருக்கிறோம். ஒரு இலட்சிய புருஷர்களாக, முன் மாதிரியானவர்களாக, அந்தந்த கிராமங்களில் முன்மாதிரியானவர்களாக, மாவட்டத்தில் சிறந்தவர்களாக, தேசியத்திலே சிறந்தவர்களாக வர வேண்டும் என்ற ஒரு இலக்கோடு உங்களுடைய கல்வியைத் தொடர வேண்டும்.

இவ்வாறு தொடர்கின்ற பொழுது நிச்சயம் ஒரு உயர்ந்த அந்தஸ்தை உங்களால் அடைந்து கொள்ள முடியும். பெற்றோர்கள் பல கஷ்டப்பட்டவர்கள், பல தியாகங்களைச் செய்தவர்கள், பல கஷ்டங்களோடு உங்களை வளர்த்திருக்கிறார்கள். அவர்களுடைய சந்தோசம், அவர்களுடைய கண்ணியம் அதைப் பாதுகாக்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். நல்ல பழக்கவழக்கங்கள் எங்களிடத்தில் இருக்க வேண்டும், நல்ல பண்பாடுகள் எங்களிடத்தில் இருக்க வேண்டும். ஆசான்களை மதிக்கின்ற அந்தப் பண்பாடு எங்களிடத்திலே வர வேண்டும்.

பெற்றோர்களைக் கடைசி வரை கண்ணியப்படுத்துகின்றவர்களாக அவர்களை பார்க்கின்றவர்களாக நாம் எம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சில பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்ற பெரிய பெரிய கல்விமான்களை நாங்கள் பார்க்கிறோம். அவ்வாறான நிலை எங்களுடைய இந்த மாவட்டத்தில் யாருடைய பெற்றோர்களுக்கும் வந்து விடக் கூடாது என்ற ஒரு பிரார்த்தனையோடு நீங்கள் எல்லோரும் இந்த மண்ணுக்கும், கற்ற பாடசாலைக்கும், கிராமத்திற்கும், மாவட்டத்திற்கும், நாட்டுக்கும் நல்லது செய்கின்ற பிள்ளைகளாக வர வேண்டும்.

கல்வியின் உச்சத்தை அடைய வேண்டும், மொழி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப நாமும் AI போன்ற துறைகளிலே எங்களுடைய வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு அந்தந்தத் துறையிலே நாங்கள் வளர்ந்து நாளை இந்த அரசாங்கத்தில் போய் நாங்கள் படித்த பிறகு பட்டதாரியாக வந்து விட்டோம் தொழில் தாருங்கள் என்று அரசை நம்பி இருக்கின்றவர்களாக இல்லாமல் தொழில் வழங்குகின்றவர்களாக சிறந்தவர்களாக, உயர்ந்தவர்களாக வர வேண்டும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஒதியமலைப் படு கொ**லைக்கு நீதி விசாரணை தேவை.!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலைக் கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென…

28 0 0
இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி இளைஞன் உ**யிரிழப்பு.!

வவுனியாவில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் வவுனியா, பூந்தோட்டம் பெரியார்குளத்தைச் சேர்ந்த சதுர்சன் (வயது…

46 0 0
இலங்கை செய்திகள்

இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைத்து மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 14 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பை…

44 0 0
இலங்கை செய்திகள்

பு*லிகளின் காவல்துறைக் கட்டமைப்பு சிறப்பாக செயற்பட்டதாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு.!

பொலிஸார் மதுபோதையிலும், வெற்றிலை, பாக்கு மென்றவாறும் கடமையாற்றுவது தொடர்பிலும், பொலிஸாரின் தவறான அணுகுமுறைகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்ட வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், 2009ஆம்…

38 0 0