உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைத்து மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 18 நிமிடங்கள் முன்
39 பார்வைகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 14 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பை நடைமுறைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிக்கையிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கையிலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 6.5 சதவீதமும், விவசாயத்துறைக்கு 4.5 சதவீதமும், வீடமைப்புத் துறைக்கு 1.3 சதவீதமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சுக்கு மாத்திரம் 14 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வளவு அதிகளவிலான நிதி ஒதுக்கீடு அவசியமா என்பதை ஆராய வேண்டும் என்றார்.

இலங்கையைவிட அதிக சனத்தொகையைக் கொண்ட பிலிப்பைன்ஸ், தாய்வான், ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இராணுவத்தின் எண்ணிக்கையைப் பகுதியளவில் குறைத்து, அந்த வளங்களை மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸார் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி., பொலிஸாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

பொலிஸாருக்கான அவதான நிலைக் கொடுப்பனவை அதிகரிப்பதாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் காணிகளில் இயங்கி வரும் பொலிஸ் நிலையங்களுக்குப் பதிலாகப் புதிய கட்டடங்களை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மேலும், மட்டக்களப்பு வவுணதீவு தாண்டியடி பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை (STF) முகாமுக்குள் உள்ள மயானப் பகுதியை விடுவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் இதுவரையில் திருப்திகரமான நிலையை அடையவில்லை எனச் சுட்டிக்காட்டிய சாணக்கியன் எம்.பி., மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் வீதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரேமானந்தன் முன்வைத்த யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கல்லடி – பாலமுனை பகுதியில் சுமார் 600 மீற்றர் நீளமான வீதியை விடுவிப்பதற்கான அந்த யோசனையின் அடிப்படையில் குறித்த வீதியை மக்களின் பாவனைக்காக விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள வீதிகளை விடுவிப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரையில் அவை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, குருக்கள்மடம் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பாடசாலை விடுவிக்கப்பட்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லங்களை விடுவிக்குமாறும் சாணக்கியன் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

அதேபோன்று, பலாலி பகுதியில் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்புக்காக மேலதிக காணிகள் தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவிப்பதைச் சுட்டிக்காட்டினார்.

எனினும், பலாலி, மயிலத்தமடு, வசாவிளான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றார்.

மேலும், பலாலி வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளுக்காக 26 ஹெக்டேயர் காணி அவசியம் எனக் குறிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியாக, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி இளைஞன் உ**யிரிழப்பு.!

வவுனியாவில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் வவுனியா, பூந்தோட்டம் பெரியார்குளத்தைச் சேர்ந்த சதுர்சன் (வயது…

40 0 0
இலங்கை செய்திகள்

பு*லிகளின் காவல்துறைக் கட்டமைப்பு சிறப்பாக செயற்பட்டதாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு.!

பொலிஸார் மதுபோதையிலும், வெற்றிலை, பாக்கு மென்றவாறும் கடமையாற்றுவது தொடர்பிலும், பொலிஸாரின் தவறான அணுகுமுறைகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்ட வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், 2009ஆம்…

38 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையின் கடன் தரப்படுத்தல் ‘சி’ மட்டத்திலிருந்து ‘பி’ மட்டத்துக்கு உயர்வு.!

சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான எஸ் அன்ட் பி, இலங்கையின் கடன் தரப்படுத்தலை ‘சி’ மட்டத்திலிருந்து ‘பி’ (நிலையானது) மட்டத்துக்கு உயர்த்தியுள்ளது என்று நிதி மற்றும் திட்டமிடல்…

31 0 0
இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் இருவருக்கு பதவி உயர்வு.!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச்…

35 0 0