பு*லிகளின் காவல்துறைக் கட்டமைப்பு சிறப்பாக செயற்பட்டதாக ரவிகரன் எம்.பி தெரிவிப்பு.!
பொலிஸார் மதுபோதையிலும், வெற்றிலை, பாக்கு மென்றவாறும் கடமையாற்றுவது தொடர்பிலும், பொலிஸாரின் தவறான அணுகுமுறைகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்ட வன்னி மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காவல்துறைக் கட்டமைப்பு தனிமனித ஒழுக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு என்பவற்றில் சிறப்பாக செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை தமிழ் மக்களின் இடர்பாட்டைத் தீர்க்கும் விதமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள காவல் நிலையங்களில் கடமை நேரம் முழுவதும் தமிழில் பணியாற்றக் கூடிய அதிகாரிகளையும் பதிவகப் பணியாளர்களையும் நியமிக்குமாறும், முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் இயங்கிவரும் தனியார் காணியை உடனடியாக விடுவிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2027ஆம் ஆண்டிற்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் 28.11.2026 இன்று பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌரவ தவிசாளர் அவர்களே!
2027ஆம் ஆண்டுக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செலவுத் தலைப்புகள் தொடர்பாக வன்னி மக்களின் சார்பில் உரையாற்றுகின்றேன்.
நான்கு செலவுத் தலைப்புகளுக்குமான மொத்த மதிப்பீடு 230,500 மில்லியன் ரூபாய். 2026 திருத்திய மதிப்பீட்டைவிட 9,541 மில்லியன் ரூபாய், அதாவது 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மூலதன மதிப்பீடு குறைந்துள்ளதால் மொத்த அதிகரிப்பும் மீண்டுவரும் செலவிலேயே உள்ளது. மொத்தத்தில் கிட்டத்தட்ட 72 சதவீதம் காவல்துறைக்குரியது.
அதன் மூலதன மதிப்பீடு 9,482 மில்லியன் ரூபாய். கட்டட நிர்மாணமும் மேம்பாடும், காவல் துறையினருக்குரிய பயிற்சி, காவல் சேவையின் இலத்திரனியல் மயமாக்கல் ஆகியவற்றை வரவேற்கின்றோம். இந் நிதி மக்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, அவர்களது மொழியில் வினைத்திறனான சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வடக்கு, கிழக்கிலுள்ள காவல் நிலையங்களில் அறிக்கைகளைப் பெற நீண்ட நேரம் காத்திருப்பதாக மக்கள் முறையிடுகின்றனர். கடமைநேரம் முழுவதும் தமிழில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளையும் பதிவகப் பணியாளர்களையும் நியமியுங்கள். அல்லது அத்தகைய திறனை வடகிழக்குப் பிராந்தியத்தில் பணியாற்றும் காவல் துறையினர் பெற்றிருக்க வகை செய்யுங்கள்.
முறைப்பாடுகள், வாக்குமூலங்கள், காவல்துறையால் வழங்கக்கூடிய வழக்கு ஆவணங்கள் ஆகியவை தமிழில் வழங்கப்படுவது வட கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை.
முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது அவற்றைப் பதிந்து பதிவு இலக்கம் கொடுத்து அதன் முன்னேற்றத்தை அறிவதற்கான ஏற்பாடும் காவல் நிலையச் சேவை மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்தவேண்டிய ஒரு பக்கம். அவசர அழைப்பு பெறப்படும் போது அத்தகைய அழைப்பு பெறப்படும் நேரம், உதவி அனுப்பப்பட்ட நேரம், சம்பவ இடத்தை அடைந்த நேரம் ஆகியவற்றை இலத்திரனியல் முறையில் பதிவு செய்து தாமதங்கள் மேற்பார்வையிடப்படும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், தமிழில் முறைப்பாடுகளைப் பதிவு செய்து உரிய ஆவணங்களை வழங்குவதற்கும் பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பாகவும் இரகசியத்தன்மையுடனும் முறைப்பாடு செய்வதற்கும் தேவையான நடைமுறைப் பயிற்சி வன்னியில் முறைப்பாடுகளைப் பெறும் அனைத்துக் காவலர்களுக்கும் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கௌரவ தவிசாளர் அவர்களே!
மதுபோதையில் கடமையாற்றுதல், சேவை வழங்கும்போது வெற்றிலை, பாக்கு மெல்லுதல் என்பன அரச நடைமுறைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா? காவல் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா? இவற்றோடு முறைப்பாட்டைப் பதிவு செய்ய இயலாது என்று காவல் நிலையங்கள் மக்களுக்குத் தெரிவிக்கலாமா?
ஏனெனில், 2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் கூட வடகிழக்கில் காவல்துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள். குடிபோதையை முற்றுந் துறந்தவர்கள். வீதிப்போக்குவரத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள். அவர்களின் காலத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட எங்களுக்கு தற்போதைய காவல்துறையினரின் அணுகுமுறையை மலைக்கும் மடுக்குமான வேறுபாடாகவே ஒப்புநோக்க வேண்டியுள்ளது.
எமக்கு , அறத்துக்கு, சட்டம் ஒழுங்குக்கு அரணாக வேண்டிய ஒரு கட்டமைப்பின் ஒரு பகுதி ஊழியர்களே கையூட்டுக்கும் சாட்சிகளைக் காட்டிக்கொடுப்பதற்கும் சேவை நாடி வருவோரைக் காத்திருக்க வைப்பதற்கும் துணை நின்றால், அப்படியான காவல்துறைக் கட்டமைப்புக்கு தற்போது மிகவும் தேவையாக இருப்பது ஒரு வினைத்திறன் மிக்க கருத்தோட்டப்பெயர்வு – paradigm shift!
திறன்விருத்திப் பயிற்சிகள் கொண்டு காவலர்களை மேலும் மேம்படுத்தல், காவல் நிலையத் தரவுகளை எண்ணிமப்படுத்தல், முறைப்பாடுகளுக்கான தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நிலவும் விரைவு தன்மையை அல்லது தாமதத்தை ஏனைய உயர்மட்டங்களும் அவதானிக்க முடிவதற்கான ஒரு நிகழ்நிலைப் பொறிமுறை.
காவல் நிலையங்களில் கண்காணிப்புக்கருவிகள் பொருத்தப்படல் என்பவை தொடர்பான
சாத்தியப்பாடுகளை அரசு ஆராயவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
தெளிவான ஒழுக்க நியமங்கள், மீறல்கள் சுயாதீனமாக விசாரிக்கப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் அதன் தீவிரத்துக்கேற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படல் என்பன காவல்துறையின் நிலைமாற்றத்துக்கு மிகமிகத் தேவையானவை.
உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தமிழ் மக்கள் காவல்துறையால் அச்சுறுத்தப்படுவதாக உணரும் நிலை மாற வேண்டும்.
போதைப்பொருள், கசிப்பு விற்பனை குறித்துத் தகவல் தருவோர் அஞ்சும் நிலையும் மாறவேண்டும். முறைப்பாட்டாளரின் தகவலை யார் அணுகினர் என்பதைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடும் இரகசியம் பேணப்படுவதற்கான ஏற்பாடும் காவல் நிலையச் சேவை வழங்கல் தொடர்பாக மேம்படுத்தப்பட வேண்டியுள்ள மற்றொரு விடயம்.
சாட்சிகளுக்கு மிரட்டல் ஏற்பட்டால் அபாயத்தை உடனடியாக மதிப்பிட்டு பாதுகாப்பு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
மரங்களுக்கு அருகில் மறைந்திருந்து வாகனங்களைத் தெரிவு செய்து நிறுத்தும் நடைமுறையிலும் பாரபட்சம் குறித்த ஐயநிலை எழுகிறது. தமக்கு வேண்டியவர்களை நிறுத்தாது விடுவதும் ஏனையோரைத் தண்டிப்பதுமான அகச்சார்பு நிலை, காவல்துறைக் கட்டமைப்பின் மாண்புக்கு இழுக்கை ஏற்படுத்தி விடுகிறது.
விபத்து அதிகமுள்ள வன்னி வீதிகளில் தெளிவான வேக வரம்புகள், தரநிலைச் சோதனை செய்யப்பட்ட கண்காணிப்புக் கருவிகள் நிறுவப்பட்டு விதிமீறல்கள் தமிழில் அறிவிக்கப்படுவதையும் ஆதாரத்தைப் பார்த்து மறுபரிசீலனை கோரும் வசதி ஆகியவற்றுடனான முன்னோடித் திட்டம் மாவட்டந்தோறும் தொடக்கம் பெற வேண்டும். விபத்துகளும் காயங்களும் குறைகின்றனவா எனும் ஆய்வும் இத்தகைய செயற்பாடுகளில் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டியவை.
மேலும், முல்லைத்தீவு காவல் நிலையம் இன்னமும் தனியார் காணியில் இயங்குகிறது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பேசப்பட்டவாறு, கோவில்குடியிருப்பில் அமைக்கப்படும் புதிய நிலையத்துக்கு விரைவில் காவல் நிலையம் இடமாற்றப்படவேண்டும். தற்போதைய காணியை முருகேசு நாகம்மா, சி.பரமநாயகி உள்ளிட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு சொத்துச் சேதங்களுக்குரிய இழப்பீட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – என்றார்.


