வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு
யாழ்ப்பாண மருத்துவச் சபையுடன் இணைந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று (27.11.2026) வெள்ளிக்கிழமை நடாத்தியது.
இச்செயலமர்வில் யாழ்ப்பாண மருத்துவச் சபையின் சார்பில் மருத்துவச் சபையின் செயலாளரும் குழந்தை மருத்துவ நிபுணருமான பேராசிரியர் பாலசுப்பிரமணியம் சயந்தன், யாழ்ப்பாண மருத்துவச் சங்கத் தலைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியுமான பேராசிரியர் உருத்திரபசுபதி மயூரதன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் எம்.பிரியதர்ஷன் ஆகியோருடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் யாழ். மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகனப் பரிசோதகர் ஆகியோரும் வளவாளர்களாகப் பங்கேற்றிருந்தனர்.
இச்செயலமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன், ‘ஒரு விபத்து என்பது அதனை அறிகின்ற தரப்புக்களுக்கு ஒரு செய்தியாகக் கடந்துவிடுகிறது. ஆனால், அந்த விபத்தில் பாதிக்கப்படுகின்ற தரப்புக்கு அது மிகப்பாரிய இழப்பை ஏற்படுத்திவிடுகின்றது என்பதை எவரும் உணர்வதில்லை’ எனத் தெரிவித்தார்.
‘அவுஸ்திரேலியாவில் ‘Low-hanging fruit’ என்ற ஒரு பழமொழி பிரபலமானது. ‘நாம் முதலில் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள பழங்களைப் பறிக்கவேண்டும்’ என்பதே அதன் பொருளாகும். அதுபோல நாங்கள் முதற்கட்டமாகச் சிறிய சிறிய விடயங்களைச் செய்தால்கூட அதிலிருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, எமது பிரதான வீதிகளில்கூடச் சில இடங்களில் மின்விளக்குகள் இல்லை. அது சின்ன விடயம்தானே என நாம் காலதாமதம் செய்கின்றோம். அதுகூட ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தக் காரணமாகிவிடும். அதுபோல ஒரு சிறிய முயற்சிதான் இந்த விழிப்புணர்வுப் பயிற்சி’ எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வில் வளவாளராகப் பங்கேற்ற யாழ்ப்பாண மருத்துவச் சபையின் செயலாளரும் குழந்தை மருத்துவ நிபுணருமான பேராசிரியர் பாலசுப்பிரமணியம் சயந்தன், இந்த விழிப்புணர்வுச் செயலமர்வானது கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே தம்மால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்றைய இச்செயலமர்வு தமது ஏழாவது செயலமர்வு எனவும் குறிப்பிட்டார்.
உலக வங்கியின் மதிப்பீட்டின் அடிப்படையில் இலங்கையில் ஆண்டுதோறும் அண்ணளவாக 38 ஆயிரம் வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அவற்றின் மூலம் மூவாயிரம் பேர்வரை உயிரிழக்கின்றார்கள். அவர்களில் முந்நூறு பேர்வரை சிறுவர்கள் எனவும், எட்டாயிரம் பேர்வரை கடுமையான காயங்களுக்கு உள்ளாகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், கடுமையான காயங்களுக்கு உள்ளாகுபவர்களில் ஒருவருக்குச் சத்திரசிகிச்சைக்காக அரசாங்கம் ஐந்து இலட்சம் ரூபா முதல் பதினைந்து இலட்சம் ரூபா வரை செலவிடுவதாகவும், சராசரியாக விபத்து நோயாளி ஒருவருக்கு ஒரு நாளைக்கு மூன்று இலட்சம் ரூபா நிதியை அரசாங்கம் செலவிடுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துரைத்த யாழ். மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர், இலங்கையில் சராசரியாக தினசரி 8 பேர் வீதி விபத்துக்களால் உயிரழப்பதாகக் குறிப்பிட்டார். ‘நாம் ஒவ்வொருவரும் சாரதிகள் என்ற அடிப்படையில் எமது வாகனங்களைக் கவனமாகக் கையாளவேண்டும். வாகனங்களைப் பழுதுபார்க்கவேண்டும்; ரயர்கள் தேய்ந்தவுடன் மாற்றவேண்டும்; தினசரி வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது பிறேக் முறையாக வேலை செய்கின்றதா எனப் பார்க்கவேண்டும். இவற்றைச் செய்தாலே கணிசமான அளவு வீதி விபத்துக்களைக் குறைக்கமுடியும்’ எனக் குறிப்பிட்டார்.
இச்செயலமர்வில் வளவாளராகப் பங்கேற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர், ‘விபத்துக்கள் நடந்தவுடன் காயமடைந்தவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லாது பலர் பொலிஸ் வரும்வரை காத்திருக்கிறார்கள். நீங்கள் விபத்து நடந்த இடத்தைச் சரியாக அடையாளப்படுத்திவிட்டு, அதனை உங்கள் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துவிட்டுக் காயமடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம். அதனால் சட்டரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை’ எனத் தெரிவித்தார்.
நிகழ்வின் வளவாளராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் எம். பிரியதர்ஷன் கருத்துரைத்தபோது 5 முக்கிய வியங்களை மையமாக வைத்து தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். பாதுகாப்பான வேகம், பாதுகாப்பான பயணம், பாதுகாப்பான வாகனம், பாதுகாப்பான வீதி, விபத்துக்குப் பிந்தய பராமரிப்பு உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வளவாளரான யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியுமான பேராசிரியர் உருத்திரபசுபதி மயூரதன், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உடற்கூற்றுப் பரிசோதனை செய்வது குறித்து உறவினர்கள் பலர் எம்மிடம் கேள்வி எழுப்புகிறார்கள். இப் பரிசோனையை நாங்கள் சட்டத்தின் தேவை கருதி மட்டுமே செய்கின்றோம். பொலிஸ் தரப்பின் சட்டரீதியான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான தேவைப்படுவதால்தான் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. உடற்கூற்றுப் பரிசோதனையினைச் செய்யுமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி அல்லது நீதிபதி உத்தரவிடுவார் அதன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.
இச்செயலமர்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பொது முகாமையாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.









