7,000 தொன் டீசலுடன் கடலுக்குள் மூழ்கிய கப்பல்!
ஸ்பெயினின் இபிசா தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சுமார் 7,000 தொன் டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற எண்ணெய்க் கப்பல் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இபிசா தீவின் கரையிலிருந்து சுமார் 46 கிலோமீற்றர் தொலைவிலும், வலென்சியாவிலிருந்து 57 கடல் மைல் தொலைவிலும் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மால்டா நாட்டின் கொடியுடன் பயணித்த ‘Med Emre’ என்ற குறித்த கப்பலில் 17 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பலேரிக் தீவுகளின் அவசர சேவைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏனைய ஆறு பேருக்கும் தாழ்வெப்பநிலை உள்ளிட்ட சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கப்பல் மூழ்கியதால் கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விபத்தின் போது எரிபொருள் கடலில் கசிந்துள்ளதா என்பது தொடர்பில் இதுவரை போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என பலேரிக் தீவுகளின் தலைவர் மார்கா புரோஹென்ஸ் தெரிவித்துள்ளார்.


