திருப்பரங்குன்றம் கோவில் ஸ்தானீகர்களை அச்சுறுத்துவதை அமைச்சர்கள் கைவிட வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஸ்தானீகர்களை அச்சுறுத்துவதையும், தேவையற்ற வகையில் தொந்தரவு செய்வதையும் அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தமிழக வெற்றிக் கழக அரசு வேண்டுமென்றே மீறியுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ள நிலையில், தனது தவறை மறைப்பதற்காக அறங்காவலர்கள் மீது பழியைச் சுமத்துவதோடு, ஸ்தானீகர்களின் பெயர்களையும் தேவையின்றி இந்த விவகாரத்தில் இழுத்துள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு.
வரம்பு மீறிச் செயல்பட்ட இந்த அரசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் ஸ்தானீகர்களுக்கு அழுத்தம் கொடுத்து கடிதங்களைப் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது உண்மையெனில், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்து மக்களின் உரிமைகளை முடக்குவதில் காட்டும் வேகத்தில் ஒரு துளியாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு கவனம் செலுத்தியிருந்தால், பெண் மாவட்ட ஆட்சியரிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் இந்நேரம் கைது செய்யப்பட்டிருப்பார்.
இனியாவது, தாங்கள் இழைக்கும் தவறுகளுக்கு மற்றவர்களை மிரட்டிப் பலிகடாவாக்கும் செயல்களைக் கைவிட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது நிர்வாகத்தில் நடைபெறும் தவறுகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


