தென்கொரியாவில் இடம்பெற்ற விபத்து; இலங்கைத் தொழிலாளர்கள் உ**யிரிழப்பு.!
தென்கொரியாவின் கியோங்கி மாகாணம், ஹ்வாசோங் பகுதியில் பணி முடிந்து தங்குமிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில், ஹ்வாசோங் நகரின் ஜங்கான்-மியோன் (Jangan-myeon) பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணி முடிந்து வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த 30 வயதுடைய இரு இலங்கைத் தொழிலாளர்கள் மீது, 7.5 தொன் எடையுடைய பாரவூர்தி ஒன்று மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்து இடம்பெற்றவுடன் இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு இலங்கைப் பிரஜைகளின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இவ்விபத்துத் தொடர்பில், பாரவூர்தியைச் செலுத்திய 50 வயதுடைய சாரதிக்கு எதிராகத் தொழில்முறை அலட்சியத்தினால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பாரவூர்தி சாரதி மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ இருக்கவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் அதற்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் சி.சி.ரி.வி காணொளிகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்களைப் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.


