ஒதியமலைப் படு கொ**லைக்கு நீதி விசாரணை தேவை.!
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலைக் கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
எனவே ஒதியமலைப் படுகொலைக்குரிய நீதி விசாரணையை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
2027ஆம் ஆண்டிற்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒதியமலைப் படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டும்.
குறிப்பாக முல்லைத்தீவு – ஒதியமலைக் கிராமத்திற்குள் கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி அதிகாலையில் இராணுவத்தினர் சிவில் உடையில் நுழைந்து, அங்கு வீடுகளில் இருந்த இளைஞர்களை அழைத்துவந்து, ஒதியமலை சனசமூக நிலைய கட்டடத்திற்குள் வைத்து 32 பேரை கொடூரமாக வெட்டியும், சுட்டும் படுகொலை செய்த சம்பவம் இடம்பெற்றது.
எதிர்வரும் 02.12.2026 அன்று அதாவது இன்னும் மூன்று நாட்களில் ஒதியமலைப் படுகொலையின் 42ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் குறித்த ஒதியமலைப் படுகொலை நினைவேந்தலில் நானும் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றேன்.
அந்தவகையில், குறித்த ஒதியமலைப் படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டுமென பாதுகாப்பு பிரதி அமைச்சரைக் கோருகின்றேன்.
முன்பிருந்த அரசாங்கங்கள் இந்த ஒதியமலைப் படுகொலைக்கான நீதியை வழங்கவில்லை.
ஆனால் இந்த அரசு கறுப்பு ஜூலை விடயத்தில்கூட கரிசனையுடன் செயற்படுகின்றது. குறிப்பாக கறுப்பு ஜூலை படுகொலைக்குரிய விசாரணைக்குழு அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றீர்கள். அதனை நாம் வரவேற்கின்றோம்.
அதேபோல் இந்த ஒதியமலைப் படுகொலைக்கும் நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இந்த அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்.
இந்த ஒதியமலைப் படுகொலையில் பெரும்பாலும் தமிழ் இளைஞர்களே படுகொலை செய்யப்பட்டனர். திருமணமாகி சில மாதங்களேயான நிலையிலும் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், நான்கு பேர் கூட படுகொலை செய்யப்பட்டனர். ஒதியமலைக் கிராமமே சோக மயமாக இருக்கின்றது.
இந்த ஒதியமலைப் படுகொலை தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பும் இருக்கின்றது. அந்த நீதிமன்ற தீர்பபை தாங்கள் எடுக்க முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் நான் அந்த ஒதியமலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பினை பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் சேர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றேன்.
எனவே, தயவுசெய்து ஒதியமலைப் படுகொலைக்குரிய ஒரு நீதியான விசாரணையினை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சரை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கோருகின்றேன் – என்றார்.


