ஹட்டன் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவுத் தபால் விநியோகத்தில் தாமதம் : பல்கலைக்கழக மாணவி பாதிப்பு!
டிக்கோயா புளியாவத்தை, இன்ஜெஸ்றி பகுதியில் பதிவு தபால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
பெற்றோரின் கூற்றுப்படி, பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து மாணவிக்கு அனுப்பப்பட்ட பதிவு தபால் கடிதம் கடந்த 07.09.2026 அன்று அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 16.09.2026 அன்றே, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அதாவது சுமார் ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மாணவிக்கு அந்த பதிவு தபால் கிடைத்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான முக்கியமான கடிதம் உரிய நேரத்தில் கிடைக்காததால், மாணவி கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்த பதிவு தபால் பற்றியது தொடர்பாக டிக்கோயா தபால் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தபோதும், தங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து புளியாவத்தை தபால் நிலைய அதிகாரியிடம் விசாரித்தபோது, தபால் விநியோகம் செய்வதற்கான உத்தியோகத்தர்கள் இல்லாத காரணத்தினால், சனிக்கிழமைகளில் மாத்திரமே அப்பகுதியில் தபால் விநியோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டதாக பெற்றோர் கூறுகின்றனர்.
அப்பகுதியில் தபால் விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த பின்னர், அவருக்குப் பதிலாக புதிய உத்தியோகத்தர் ஒருவர் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புளியாவத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பதிவு தபால் உட்பட முக்கியமான தபால்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை தொடர்பாக நுவரெலியா மாவட்ட தபால் முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான தபால் சேவை தடையின்றி இடம்பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக நாளை உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.