மகளிர் பிரீமியர் லீக் தொடரிற்கான வீராங்கனைகளின் ஏலம் ஒக்டோபரில் இடம்பெறும்
மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரின் 5 ஆவது பருவத்துக்கான வீராங்கனைகள் ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி கொச்சியில் நடைபெறும் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல், போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து அணிகளுக்கும் இன்று (16) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஊடக வெளியீட்டையும் வெளியிட்டுள்ளது.
அத்துடன், 2027 ஆம் ஆண்டுக்கான WPL தொடர் ஜனவரி 14 முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பிசிசிஐ திகதிகளை உறுதி செய்துள்ளது.
இதேவேளை, அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீராங்கனைகளின் பட்டியலை தீர்மானிக்க ஐந்து அணிகளுக்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட 18 வீராங்கனைகள் வரை இடம்பெற முடியும். தற்போதைய சுழற்சிக்கான ஒரு அணியின் மொத்த கையிருப்புதொகை 15 கோடி இந்திய ரூபாயாகும்.
2027 மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், மும்பை மற்றும் வடோதரா ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், புதிய மைதானம் நிர்மாணிக்கப்பட்டு வரும் வாரணாசியிலும் சில போட்டிகளை நடத்த முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன.
இருப்பினும், அந்த மைதானத்தில் உள்நாட்டுப் போட்டிகளை நடத்தி சோதித்த பிறகே மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த முடியும் என்பதால், இப்போதைக்கு அங்கு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.