திரைப்பட விளம்பரத்தில் அரசியல் கலக்கக் கூடாது : ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது அறிமுக திரைப்படமான ‘சிக்மா’ (Sigma) தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திரைப்படம் தொடர்பில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக தனது தந்தையும் ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக தனது தந்தையிடம் எந்தவொரு உதவியையும் தான் கேட்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத்தின் விளம்பரம் என்பது முழுமையாக திரைப்படத்தைப் பற்றியதாகவே இருக்க வேண்டும் எனவும், அதில் அரசியலைக் கலக்கக் கூடாது என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை தற்போது முதலமைச்சராக இருப்பதால் பல்வேறு பொறுப்புகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதேவேளை, தான் இயக்குநராக என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்ப்பதற்கு தனது தந்தையும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.