உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
146 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வன்னியின் பரந்த, சிதறிய கிராமங்களில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடு மக்களை பலவழிகளிலும் பாதிப்புக்குள்ளாக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பெற்றோலியம் மற்றும் நீர்வழங்கல் சார்ந்த சேவைகளின் விலை, தரம், பாதுகாப்பு, சேவையின் தொடர்ச்சி மற்றும் நுகர்வோர் முறைப்பாடுகள் என்பவற்றை ஒருங்கிணைத்து சுயாதீனமாக மேற்பார்வை செய்யும் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பு தேவை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் சார்ந்த சேவைகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவர வேண்டுமெனக் கோரி நாடாளுமன்றில் 11.09.2026 இன்று முன்மொழியப்பட்ட பிரேரணையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் சார்ந்த சேவைகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவர வேண்டுமெனக் கோரும் இப்பிரேரணை வரவேற்புக்குரியது.

விலை, தரம், பாதுகாப்பு, சேவையின் தொடர்ச்சி மற்றும் நுகர்வோர் முறைப்பாடுகள் என்பவற்றை ஒருங்கிணைத்து சுயாதீனமாக மேற்பார்வை செய்யும் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பு மின்சாரத்துறைக்கு கிடைப்பதைப் போல பெற்றோலியம் மற்றும் நீர் சார்ந்த சேவைகளுக்கும் கிடைக்கவேண்டும். வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது.

முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பரந்த, சிதறிய கிராமங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் போது அது ஒரு போக்குவரத்துப் பிரச்சினையாக மாத்திரமன்றி குடும்பங்களின் வருமானத்தையும் உணவுப் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கும் காரணியாகி விடுகிறது.

வன்னியின் பல கிராமங்கள் இன்னமும் குடிநீர்த் தேவைக்காக தாங்கிகளில் நிரப்பப்படும் நீரைப் பெற்று பயன்படுத்தும் நிலையிலும் உள்ளன.

முல்லைத்தீவில் உள்ள 900 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். ஒரு பொறியியல் தொழில்நுட்பபீட மாணவர் அண்மையில் இரு சீறுநீரகங்களும் செயலிழந்து மரணித்துள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட 8500 குடிநீர் இணைப்புகள் மாவட்டத்தின் கிட்டத்தட்ட 20% தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்கள் கிளிநொச்சியும் முல்லைத்தீவும் தான். இவ்வாறான முகாமையாளர் அலுவலகம் இன்றிய நிலையில், நீர் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகளுக்கான தீர்வு காணல், மாதாந்த கட்டணப் பட்டியலை சீராக்கல், நீர் பரிசோதனை, ஆய்வுகூட வசதிகள், உத்தியோகபூர்வ நிதி நடவடிக்கைகளுக்கான காசாளர் வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காகவும் 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் புதிய நீர் இணைப்புத் தாமதம், நீர்த்தரம், தொடர்ச்சியற்ற விநியோகம், குறைந்த நீரழுத்தம் தொடர்பான முறைப்பாடுகளை சுயாதீனமாக விசாரிக்கும் கட்டமைப்பு வன்னி மக்களுக்கு அத்தியாவசியமாகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் குறைந்த சேமிப்புத் திறன், மின்வெட்டு நேரத்திலும் சேவையைத் தொடர்வதற்கான மாற்று மின்வழங்கல் கட்டமைப்பு, தீப்பாதுகாப்பு, அளவீட்டுத்துல்லியம் மற்றும் நுகர்வோர்க்கான அடிப்படை வசதிகள் என்பன கட்டாயத் தரநிலைகளாக நிர்ணயிக்கப்பட்டு அவை காலமுறைப்படி கண்காணிக்கப்படவேண்டிய தேவை காணப்படுகிறது.

மக்கள் தொகை, அருகிலுள்ள நிரப்பு நிலையத்துக்கான தூரம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலைய விரிவாக்கத்திற்குரிய தேவையும் காணப்படுகிறது.

எனவே, அரச நிறுவனங்களுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தாமல் அவற்றின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தி மக்களுக்கு வெளிப்படையானதும் நடுநிலையானதும் தரமானதுமான சேவையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்படி இரு சேவைகளை சட்ட மற்றும் அமுலாக்க அதிகாரங்களுடன் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

98 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலை…

75 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

80 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரை அடிக்க முயன்ற தனித்துணை ஆட்சியர்; அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை…

124 0 0