லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெறும் சில்வர்ஸ்டோன் (Silverstone) சிற்றூந்து பந்தய போட்டியை கொடியசைத்து ஆரம்பித்து வைக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய முதலீட்டாளர்களைச் சந்தித்து முக்கிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார்.
முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கிண்ண (Michelin Le Mans Cup) சிற்றூந்து பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிடுகிறார்.
இந்தப் போட்டியை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக லெ மான்ஸ் கிண்ண நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிரத்யேகமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ மற்றும் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிடுவதற்காகவும் முதலமைச்சர் விஜய் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.