இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகையையொட்டி, இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பன்முகச் செயல்பாட்டுத் திறன் கொண்ட போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் உதயகிரி’ (INS Udaygiri), மூன்று நாள் செயல்பாட்டுப் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக நேற்று (08) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, நடமாடும் பயிற்சிக்குழுவொன்றின் மூலம் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வை மேற்கொண்டு, இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கமாகும்.
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய இரண்டிற்கும் தேவையான இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களையும் அந்தக்கப்பல் கொண்டு வந்துள்ளது.
ஐஎன்எஸ் உதயகிரி, இலங்கை சர்வதேசப் போக்குவரத்துக் கட்டளை (SLN IFR-2025) திட்டத்தில் பங்கேற்பதற்காக, விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்துடன் இணைந்து, முன்னதாக 2025 நவம்பரில் கொழும்புக்கு வருகை தந்திருந்தது.
மேலும், டித்வா புயலின் போது நடைபெற்ற மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளிலும் இந்தப் போர்க்கப்பல் பங்கேற்று, உடனடி நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன், தனது மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாட்டிற்கு முதல் பதிலளிப்பவராக இந்தியாவின் பங்கையும் வலுப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.