நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடியில் சிக்கிய 6 ஆசிரியர்கள் பணிநீக்கம்!
அஸ்வெசும மோசடி தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியல் ஹட்டன் நீதி மன்றம் நீடிப்பு.
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திடம் இன்று (08) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான இன்றைய வழக்கு விசாரணையின்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் இணையவழி ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதுவரையிலான விசாரணைகளில் 2 கோடியே 85 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த தொகையும் இந்த மோசடியோடு தொடர்புப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் விசாரணைகளை சி.ஐ.டியிடம் ஒப்படைக்குமாறு ஹட்டன் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்ற நீதிபதி அந்தோணிசாமி பீட்டர் போல் உத்தரவிட்டார்.
இதேவேளை, நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்கள் உடனடி அமலுக்கு வரும்வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த திங்கட்கிழமை (07) முதல் பாடசாலைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில், 07ஆம் திகதி முதல் சம்மந்தப்பட்ட 06 ஆசிரியர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஹட்டன் கல்வி பணிமனையின் ஊடாக அந்தந்த ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவை, சாமிமலை ஆகிய பிரதேச பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. விசாரணைகளின் ஆரம்பத்திலேயே ஹட்டன் கல்வி வலய ஆசிரியர்கள் 06 பேர் இந்த மோசடியோடு தொடர்பிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து 06 ஆசிரியர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாவட்டச் செயலாளர் ஊடாக கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. கல்வி அமைச்சின் செயலாளர் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இவர்களுக்கு எதிரான விசாரணைகளின் முதற்கட்டமாகவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சம்மந்தப்பட்ட 06 ஆசிரியர்களும் மோசடியான முறையில் பெருந்தொகையான அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.