திருக்கோவில் வீதிகளில் அணிவகுத்த மாணவர்கள்! : விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகங்களும் அரங்கேற்றம்!
சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு மாணவர் பேரணியும் வீதி நாடகங்களும் இன்று (08) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பிரதான வீதியில் சிறப்பாக இடம்பெற்றன.
இவ்வாண்டு சர்வதேச எழுத்தறிவு தினம் “மக்கள், பூமி மற்றும் செழிப்புக்கான எழுத்தறிவு” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இணைந்து முன்னெடுத்த இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான பேரணி, திருக்கோவில் மணிக்கூட்டு கோபுர சந்தியை சென்றடைந்தது. அங்கு மாணவர்களால் எழுத்தறிவு மற்றும் சமூக விழிப்புணர்வை மையப்படுத்திய வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரணி திருக்கோவில் பிரதான வீதி ஊடாக திருக்கோவில் சூசையப்பர் ஆலய முன்றலை சென்றடைந்ததுடன், அங்கு ஆசிரியர்களின் பங்கேற்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பான வீதி நாடகமும் இடம்பெற்றது.
பின்னர் பிரதான வீதி ஊடாக முன்னெடுக்கப்பட்ட பேரணி திருக்கோவில் விஸ்வ துளசி வித்தியாலயத்தை சென்றடைந்தது. அங்கிருந்து மாணவர்களும் பேரணியில் இணைந்து கொண்டனர்.
தொடர்ந்து திருக்கோவில் அரியநாயகம் வீதி ஊடாக திருக்கோவில் கல்வி வலயக் கல்வி அலுவலகத்தை பேரணி சென்றடைந்தது. அங்கு போதைப்பொருள் பாவனையின் தீமைகள் மற்றும் அதிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திரு. ஏ. நசீர் மற்றும் திரு. எஸ். சுஜனுதன், வணிகக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கே. பிரபாகரன், முன்பள்ளிப் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். விவேகானந்தராஜா உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், திருக்கோவில் கல்வி வலய உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எழுத்தறிவு என்பது கல்வியைப் பெறுவதற்கான அடித்தளமாக மட்டுமன்றி, போதைப்பொருள் உள்ளிட்ட சமூகத் தீமைகளிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாத்து, பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய கருவியாகும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





