தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முனையூர் பாடசாலை அபார சாதனை!
கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
குறித்த பாடசாலையில் இருந்து இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 7 மாணவர்களில் 3 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
பின்தங்கிய கிராமப் பகுதியைச் சேர்ந்த பாடசாலையாகக் காணப்படும் முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கிடைத்துள்ள இந்தச் சிறப்பான பெறுபேறு, மாணவர்களின் விடாமுயற்சி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் சிறந்த வழிகாட்டலுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு விசேட கௌரவிப்பு
மாணவர்களின் இந்தச் சிறந்த பெறுபேற்றின் பின்னணியில், தரம் 1 முதல் தரம் 5 வரையிலான மாணவர்களை ஆரம்பம் முதல் அர்ப்பணிப்புடன் வழிநடத்திய அனைத்து ஆசிரியர்களினதும் பங்களிப்பையும், அதிபரின் வழிகாட்டலையும் பாராட்டும் வகையில் விசேட கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது தரம் 5 மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியை திருமதி விக்னேஸ்வரன் புஸ்பராணி அவர்களுக்கு விசேட கௌரவம் வழங்கப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
கல்வி அதிகாரிகள் வாழ்த்து
இந்நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி), பிரதிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி மற்றும் கல்வி முகாமைத்துவம்), உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்), ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் PSI இணைப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த பெறுபேற்றைப் பாராட்டிய கல்வி அதிகாரிகள், எதிர்காலத்திலும் கல்வித் துறையில் மேலும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
தோற்றிய 7 மாணவர்களில் 3 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளமை, முனையூர் பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.
வளங்கள் குறைவாகக் காணப்படும் பின்தங்கிய கிராமப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை என்ற நிலையிலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்ட தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் பலனாக இவ்வாறான சிறப்பான பெறுபேறு கிடைத்துள்ளதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.













