இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.!
இரத்தினபுரி, எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முதல் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி தம்புளுவன, மாரலிய பகுதியைச் சேர்ந்த, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடித்த 32 வயதுடைய பிரசாத் சம்பத் விஜேரத்ன என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இவர் இரத்தினபுரி நகரில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் ஊழியராகக் கடமையாற்றி வந்தவர் ஆவார்.
நேற்று அந்தப் பகுதியில் நண்பர்கள் சிலர் மாணிக்கக் கற்கள் தோண்டிக் கொண்டிருந்த வேளையில், அங்கு நீராடச் சென்ற மேற்படி இளைஞன் ஆழமான குழியில் சிக்கி நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.
இளைஞர் திடீரென காணாமல்போனதைத் தொடர்ந்து, மாணிக்கக் கல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் பிரதேச மக்களும் இணைந்து நேற்று இரவு 8 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து எலபாத்த பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சோகமயமான சூழல் நிலவுகின்றது.