முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு; வாள்களுடன் சிக்கிய ஐவர்.!
கொழும்பு, பொரளை பகுதியிலுள்ள வேளுவன வீதிக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்ற முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, அதில் பயணித்த 05 பேரைக் கைது செய்துள்ளனர்.
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் இட்ட கட்டளையை மீறி, இந்த முச்சக்கரவண்டி நிறுத்தப்படாமல் தப்பித்து ஓடிய நிலையிலேயே பொலிஸார் அதனைப் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து முச்சக்கரவண்டியை வழிமறித்துச் சோதனையிட்ட பொலிஸார், அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 கூர்மையான வாள்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த 05 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொலன்னாவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொரளை மற்றும் கொம்பனித்தெரு பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.