உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

தமிழ் இனப் படுகொ*லை எங்கும் இடம்பெறவில்லை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என்பதில் சர்வஜன அதிகாரம் கட்சி மிக உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது. அண்மைக்காலமாக வடக்கில் இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படுவது குறித்தும், நாடாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்கள் குறித்துக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த மே மாதம் 18ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறி நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. எமது நாட்டில் தமிழ் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுக்க இடமளித்துள்ளமை கவலையளிக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷனல் அக்மீமன, நாடாளுமன்றத்தில் பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான போலிப் பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் நாட்டுக்குப் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் நாடு பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலையும் உருவாக்கும். எனவே, இது குறித்து ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

இனப்படுகொலை நினைவுகூரல்கள் என்ற பெயரில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தடையின்றி இடம்பெறுகின்றன. இவ்வாறான நிகழ்வுகளில் பயங்கரவாதிகளின் சின்னங்கள், நிறங்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரங்கமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் அறிந்திருந்தனவா? அவர்கள் அறிந்திருந்தால் இது குறித்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், யாருடைய அழுத்தத்தின் பேரில் அல்லது யாருடைய அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்புப் பிரிவினர் மௌனம் காக்கின்றனர் என்ற கேள்வியை நாங்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம்.

கடந்த மே 18 அன்று நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் முக்கியஸ்தரான பால்ராஜ் என்பவரை ‘பிரிகேடியர் பால்ராஜ்’ என நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார். ‘பிரிகேடியர்’ அந்தஸ்து என்பது இந்த நாட்டின் உத்தியோகபூர்வ இராணுவத்திலிருந்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது. பால்ராஜ் என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, ஆயிரக்கணக்கான இளம் இராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த ஒரு கொலைகாரன். அத்தகைய நபர் ஒருவரை நாட்டின் உச்சமன்றமான நாடாளுமன்றத்தில் நினைவு கூர இடமளித்தது எவ்வகையில் நியாயம்?

குறிப்பாக, அந்தத் தருணத்தில் நாடாளுமன்றத்தின் சபாபீட தலைமைத்துவத்தை வகித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, இந்தப் பயங்கரவாதியை நினைவு கூரும் போது ஏன் எவ்வித தடுத்தல் நடவடிக்கையும் எடுக்கவில்லை? நாடாளுமன்றத்தின் தலைமைத்துவத்துக்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு உண்டு. பால்ராஜை பிரிகேடியராகக் கருதுவதால்தான் அவர் மௌனம் காத்தாரா? ஜனாதிபதி அவர்களே, உங்கள் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகரவைப் போலவே, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரிழப்புக்குக் காரணமான அந்தக் கொலைகாரனை நீங்களும் பிரிகேடியராகவே கருதுகிறீர்களா? இல்லையா? என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடிக்கடி ஏற்படும் மின்தடை; மக்கள் விடுத்துள்ள கோரிக்கை.!

கடந்த சில நாட்களாக அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மின் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர். அத்துடன்…

25 0 0
இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி மாயமானவர்களில் மூவர் ச*டலமாக மீட்பு; சிறுவனைத் தேடும் பணி தீவிரம்.!

பமுனுகம, எப்பாமுல்ல கடற்கரைப் பகுதியில் நேற்றைய தினம் (30) மாலை 5.30 மணியளவில் பட்டம் விடுவதற்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் கடல் அலையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்…

69 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சி.!

இரு ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று…

54 0 0