மகளிர் அணியின் பங்கு அவசியம் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.!
சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளிர் அணியினரே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனை மையமாகக் கொண்ட சிந்தனைகளுடன், அந்த அர்ப்பணிப்பு உணர்வு தொடர்ந்து புத்துணர்ச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்று இன்று (21) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.இதில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
மக்களுக்கான அரசியல்அமைப்பில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பது தமது உறுதியான நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே ஆயுதப் போராட்ட காலத்திலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தது 50 சதவீதம் இருக்க வேண்டும் என்பதே தமது கொள்கை என்றும், அதற்கமைய அக்காலத்தில் வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சி பெற அனுப்பப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் பெண்களும் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார்.
இன்றும் அதே கொள்கை கட்சிச் செயற்பாடுகளில் பின்பற்றப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், பெண்களின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.