தனங்கிளப்பு காட்டு பகுதியில் காணாமல் போன விரிவுரையாளர் சடலமாக மீட்பு.!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பீடத்தைச் சேர்ந்த பெண் விரிவுரையாளர் ஒருவர், அவரது மகளின் கணவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
முறைப்பாட்டில், தனது தாயாரும் தங்கையும் தங்கையின் கணவரால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொலிஸார் சம்பவ இடமான பாண்டியன்தாழ்வு பகுதியில் உள்ள வீட்டைச் சென்றடைந்து விசாரணை மேற்கொண்டபோது, வீட்டின் கூரை ஓடு அகற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான சான்றுகள் மற்றும் அறுக்கப்பட்ட தலைமுடி போன்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரம்மூலம் பணம் பெற்றதையும், திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பியதையும் பொலிஸார் கண்டறிந்தனர்.
அந்த நிலையத்தின் கண்காணிப்பு காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் மூலம், 21 வயதுடைய கணவரும் 19 வயதுடைய மனைவியும் திருகோணமலை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விரிவுரையாளர் தாக்குதலின் போது உயிரிழந்ததாகவும், பின்னர் அவரது உடலை யாழ்ப்பாணம் பகுதியில் ஒரு இடத்தில் கொண்டு சென்று வீசியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனங்கிளப்பு பகுதியில் இருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
