மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகள்: பாராளுமன்ற உறுப்பினருடன் முக்கிய கலந்துரையாடல்.!
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, மாவட்டம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோருக்கு இடையில் 16.03.2026 அன்று முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலில், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ஒன்றிய பிரதிநிதிகள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை எனக் குறை கூறி, மாவட்டத்தில் நிரந்தர அலுவலகம் அமைப்பது, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது நிகழ்வுகளில் உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல், ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாகஉயர்த்துதல் போன்ற விடயங்களை வலியுறுத்தினர்.
மட்டக்களப்பில் இதுவரை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு நடக்காத நிலையில், பாராளுமன்ற உறுப்பினரின் வினைத்திறனான செயற்பாடுகளைப் பாராட்டி இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது என ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வைத்தியர் இ.சிறிநாத் எதிர்காலங்களில் பிரதேச செயலக மட்டங்களில் கூட்டங்களை நடத்தியே தீர்வுகளை பெற்றுத் தருவதாகவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் தேவையான அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் உறுதி செய்தார்.இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் மற்றும் பல மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.