வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்; நால்வர் உயிரிழப்பு.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகியங்கனை – தெஹியத்தக்கண்டிய வீதியின் சந்துன்புர பகுதியில் பாரவூர்தி மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 58 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு – குருநாகல் வீதியின் கொஹொலான பகுதியில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று சுவரில் மோதி, எதிரே வந்த உந்துருளியை மோதியுள்ளது.
இந்த விபத்தில் அலவ்வ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய உந்துருளி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, கேகாலை – ஹெட்டிமுல்ல வீதியின் ஹேனக்கந்த பகுதியில் அதிவேகமாகச் சென்ற உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
இதில் பின்னால் அமர்ந்து பயணித்த பொஸ்ஸெல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குளியாப்பிட்டிய – நாரம்மல வீதியின் பரிகொட பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற 73 வயதுடைய முதியவர் ஒருவர் பாரவூர்தியுடன் மோதி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதி விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.