அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிப் பயணிக்கிறது.!
அரசாங்கமானது நாட்டின் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இரு புதிய அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் (05) எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
“ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகவும், உரிமைகளைப் பாதிக்கும் சட்டங்களை நீக்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால், இன்று அதற்கு மாறாக ‘அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டமூலம்’ போன்ற ஆபத்தான சட்ட மூலங்களைக் கொண்டுவந்துள்ளது.
வெளிப்பார்வைக்கு இவை நியாயமானதாகத் தோன்றினாலும், அரசாங்கம் அடக்குமுறையின் மூலம் ஆட்சியை முன்னெடுக்கவே முயல்கிறது என்பதை இதன் உட்பகுதிகளை ஆராயும்போது தெளிவாகிறது.
இச் சட்டமூலங்கள் மூலமாக பொலிஸாருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே பொலிஸாரைப் பயன்படுத்துகின்றனர்.
சமீபகாலமாக ஹோமாகம மற்றும் கொபேகனே பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் காவலில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அண்மைக்காலத்தில் பொலிஸ் காவலில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடவத்தை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இவ்வாறான சூழலில் இச்சட்டங்கள் நாட்டின் ஜனநாயகத்தை அழித்து, ஒருதலைப்பட்சமான சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அது நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதிக்கும் என சட்டத்தரணிகள், மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டின.
வழக்கமாக ஆண்டிற்கு சுமார் 500 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை 20 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து மக்கள் நீதிமன்றத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை சீர்குலைந்துள்ளமையும், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளமையும் புலனாகிறது.
அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களிலோ, ஊர்வலங்களிலோ ஈடுபடுபவர்களை அல்லது எதிர்க்கட்சிகளை இப்புதிய சட்டங்களின் கீழ் கைது செய்ய முடியும்.
அத்துடன், பொலிஸ் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதுடன், சிவில் நிர்வாகத்தை இராணுவத்தின் கீழ் கொண்டுவர அரசாங்கம் முயல்கிறது. சிவில் நிர்வாகத்தை நடாத்துவதே பொலிஸின் கடமையாகும். இராணுவத்தினரை சிவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்துவது இராணுவ ஆட்சிக்கும் சர்வாதிகாரத்திற்குமே வழிவகுக்கும்.
அரசாங்கம் தோல்வியடைந்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வாக்குறுதிகள் பொய்யாகும்போது அரசாங்கம் அடக்குமுறையைக் கையில்லெடுக்கிறது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த அரசாங்கம், இதுவரை எந்தவொரு ஊழல் வழக்கையும் தாக்கல் செய்யவில்லை. நிலக்கரி மோசடி தொடர்பான தணிக்கையாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையின்படி 8 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது.
இது தொடர்பில் அமைச்சரும் செயலாளரும் ராஜினாமா செய்த போதிலும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கருவூலப் பணம் மற்றும் 323 கொள்கலன்கள் மறைக்கப்பட்ட விவகாரத்திலும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட பின்னர், அதனைத் திருத்துமாறு அரசாங்கம் கோருகிறது.
உலக வரலாற்றிலேயே எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கத்திற்கு வேண்டியவாறு திருத்திய வரலாறு இல்லை.
ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் இந்த அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரப் பயணத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் கொடுக்கும். அரசாங்கத்தால் இனி மக்களை ஏமாற்ற முடியாது, அதற்கு நாமும் இடமளிக்க மாட்டோம்” என அவர் தெரிவித்தார்.


