புதிய அரசியலமைப்பு நிச்சயமாக கொண்டுவரப்படும்.!
நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று நிச்சயமாக கொண்டுவரப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது குறித்த நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டல்களுக்கு அமையவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் எனக் கூறிய அவர், 20ஆவது திருத்தம் என்பது தற்போதைய அவசர தேவையை நிவர்த்தி செய்வதற்காகவே முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, புதிய அரசியலமைப்பு ஒன்றை நாட்டில் உருவாக்குவது தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் இடம்பெற்ற பிரதான வாக்குறுதி எனத் தெரிவித்த அமைச்சர், அதில் அரசாங்கம் மிக உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தனித்து உருவாக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொதுமக்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் பரந்த அளவிலான கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை முன்னெடுத்து, அவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.