இந்தியாவில் வாழும் இலங்கையர் எவ்வித விசாரணைகளும் இன்றி அச்சமின்றி தாயகம் திரும்பலாம்.!
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்குத் தேவையான சட்ட ரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோருடன் இணைந்து இந்தச் சந்திப்பை அவர் நடத்தினார்கள்.
“யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க மற்றும் பலாலி விமான நிலையங்கள் ஊடாகத் திரும்பும்போது சில சிக்கல்கள் ஏற்பட்டன. இதனையடுத்து, அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, உயிரைப் பாதுகாப்பதற்காகச் சென்ற இலங்கைப் பிரஜைகள் அனைவரும் இனி நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம் திரும்பலாம்.” – என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
“நாடு திரும்பும் நபர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கும், அவசியமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் ஊடாக உதவிகள் வழங்கப்படும்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய பாதுகாப்பையும் மக்களின் உரிமைகளையும் சமநிலையில் பேணியவாறு காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20 வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615 ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் விவசாயம் செய்யும் மக்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் வீடுகளை அமைத்துக் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்குரிய அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதோடு, ஆரம்பகட்டமாக 101 குடும்பங்களுக்குத் தலா 2 இலட்சம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் மருத்துவ அதிகாரிகளின் பங்களிப்புடன் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.