உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே நோக்கம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
44 பார்வைகள்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் பௌதிக மற்றும் நிதியியல் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நீதித்துறை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் நீதிமன்றக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதே நோக்கமாகும் என்றும், அதற்காக நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகம், நீதி அமைச்சுக் கட்டிடம், புதுக்கடை நீதிமன்ற வளாகம், காலி, மாத்தளை, கந்தளாய் உட்பட புதிய நீதிமன்ற வளாகங்களின் நிர்மாணப் பணிகள் குறித்த முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மேலும், 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக இடையில் நிறுத்தப்பட்ட நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் நிர்மாணிக்கும் திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் 79 மில்லியன் மூலதனச் செலவுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம், சட்டவரைஞர் திணைக்களத்தின் கீழ் 38 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு ஆராயப்பட்டன.

தற்போது முக்கிய பங்கு வகிக்கும் சட்டவரைஞர் திணைக்களத்துக்குத் தேவையான மனித வள அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக அதன் செயல்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆய்வுகூட வசதிகளை வழங்குவதற்குரிய உபகரணங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் கிடைக்கப்பெறும் எனவும் இங்கு குறிப்பிடப்பட்டதுடன், மாதமொன்றுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பகுப்பாய்வு அறிக்கைகளின் அளவை 9 ஆயிரம் வரை அதிகரித்துக் கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தைப் பொருத்தமான இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்குக் கீழ் அதிகூடிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சிறைச்சாலைகள் திணைக்களத்திற்காகும். அதன்படி, 5 ஆயிரத்து 627 மில்லியன் மூலதனச் செலவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டிடப் புனரமைப்பு, நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வாகனங்களைக் கொள்வனவு செய்தல், மென்பொருள் கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளின் வசதிகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பொறியியல் துறையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்ப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சமூதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கீழ் செயற்படும் திட்டங்களின் நிதியியல் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், பொலிஸ், சுகாதார அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ஒரே நிறுவனத்தின் கீழ் செயற்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களான மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலகம் மற்றும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், அரசகரும மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் பணிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கொள்முதல் செயன்முறை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே டிஜிட்டல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்குத் தனித்தனி கொள்முதல் செயன்முறையைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0