மீளப் பெறப்பட முடியாத சமஷ்டி தீர்வு வேண்டும்.!
தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் கெளரவமான உரிமைகளுடன் வாழக்கூடிய மீளப் பெற முடியாத சமஷ்டி தீர்வை அனைத்து தரப்பினரும் ஓரணியில் நின்று வலியுறுத்த வேண்டுமென வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவினால் 8 மாவட்டங்களிலும் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட 100 நாள் செயற்திட்டத்தின் நான்கு வருட பூர்த்தியை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை முன்மொழிந்து இவ்வருடத்துடன் 75 வருடங்கள் ஆகின்றன.
1900களின் ஆரம்ப முதலே சிங்கள பௌத்த அரசியல் தலைமைகளின் தமிழர் எதிர்ப்பு பரப்புரைகளும் எழுத்துக்களும், தமிழ் மக்களின் அரசியல், சமுதாய நலன்களைக் காப்பதற்கான தனித்துவமான அரசியல் அமைப்பொன்றின் அவசியத்தை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உணர்த்தியது.
1921ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக சேர். பொன். அருணாச்சலம் தலைமையில் “தமிழர் மகாஜன சபா” உருவாக்கப்பட்டது.
சுதந்திரத்தின் பின் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள தலைமைகள் மேற்கொண்ட திட்டமிட்ட அரசியல் ஓரங்கட்டல்கள், நில அபகரிப்புகள், வடக்கு கிழக்கில் அபிவிருத்தி எனும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆகியன தமிழ் மக்களின் இறைமையை அபகரித்தன. இந்த இறைமை மீறலை நிறுத்துவதற்காக அன்றைய தமிழர் தலைமைகள் சமஷ்டிக் கொள்கையை 1951ஆ ம் ஆண்டு முன்வைத்தனர்.
ஒரு மக்கள் சமூகம் தமது வாழ்விடப் பிரதேசத்தில் தமக்கான அரசியல் வாழ்வை தாமே தீர்மானித்து, தம்மைத் தாமே நிர்வகித்து, கௌரவமாகவும் உரிமைகளுடனும் வாழ்வதே இறைமையாகும்.
ஒற்றை ஆட்சி முறையில் இறைமை பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும். மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப்பெற முடியும். 13ஆவது திருத்தச்சட்டம் இத்தகையதாகும்.
இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு இறைமை பகிரப்படவில்லை. அன்று தொட்டு இன்று வரையிலும் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள் இறைமையைப் பகிர்ந்துகொள்ள முன்வராத நிலையில் கானல் நீர்போன்ற 13ஆவது திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.
ஒரு நாட்டின் இறைமை என்பது அந்நாட்டு மக்களுக்குள்ள உரிமைகள், மக்கள் தமக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்து அவர்களைக் கொண்டு தமக்கேற்ற அரசியல் சமூக பொருளாதார கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி தமக்கான முன்னேற்றத்தை எட்டுவதாகும். சுருங்கக் கூறின் தமது அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமாகும்.
இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இறைமையை வெறுமனே நிலத்துடன் குறுக்கிக்கொண்டுள்ளனர்.
இலங்கையின் நிலத்தொடர்ச்சியை பாதுகாப்பதுதான் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.
இறைமை என்பது மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தமது நாட்டிலோ மாநிலத்திலோ தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்யவும், தமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும், உரிமைகைள பிரயோகிக்கவும் மக்கள் கொண்டுள்ள அதிகாரப் பலமே இறைமையாகும்.
மக்களைத் தவிர்த்துவிட்டு நிலத்தை மாத்திரம் பார்க்க முடியாது. மக்களைப் பாதுகாப்பதே இறைமையை பாதுகாப்பதாகும். இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசுகள், வடக்கு கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளன.
தமிழ் மக்கள் ஜனநாயக வழியில் தமக்கான அரசியல் தீர்வை அடைவதற்கு மக்களுக்குள்ள அதிகாரத்தை புறக்கணித்துள்ளன. உரிமைகளை அத்துமீறுகின்றன.
ஆகவே இலங்கையில் இணைந்த வடக்கு, கிழக்கில் மீளப் பெற முடியாத சமஷ்டி தீர்வே நிலையானது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
குறித்த கலந்துரையாடலில் வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டு மாவட்ட சமூகமட்ட அமைப்பினர் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


