செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்திக்க மறுத்த சஜித்!
செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்த்துச் சென்றமை தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இந்தக் கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, முஜிபுர் ரஹ்மான், எஸ். எம். மரிக்கார், சித்ரால் பெர்னாண்டோ மற்றும் ரோஹண பண்டார உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் நிறைவடைந்ததும் அவர்களில் பலரும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர். எனினும், கூட்டம் முடிந்து வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் , அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்துக் கேள்விகளை எழுப்ப முயன்றனர். எனினும், அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டு அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.