செம்மணி விடயத்தில் சர்வதேச விசாரணைக்கு அநுர அரசு ஒத்துழைக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்த வேண்டும்.!
எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு செம்மணி மனிதப் புதைகுழியை அவதானிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன இதனை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நாம் வரவேற்கின்றோம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழர் தாயகத்தில் மிகப் பெரிய மனித படுகொலைப் புதைகுழியாக செம்மணிப் புதைகுழி மாறியுள்ளது. உள்நாட்டில் மனிதப் புதைகுழி தொடர்பாக கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சகல பொறிமுறைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க தவறியதால் உள்நாட்டுப் பொறிமுறையில் ஏமாற்றம் அடைந்ததுடன் நம்பிக்கையையும் இழந்து விட்டனர்.
ஆகவே, பாதிக்கப்பட்ட மக்கள் 2019 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக சகல சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி நிற்கும் ஒரே நிலைப்பாடான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை மேற்கொள்ள இலங்கையின் தற்போதைய அநுரகுமார அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கான அழுத்தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இப்படியான பல கோரிக்கைக் கடிதங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அநுரகுமார அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் விவகாரத்தில் அவ்வப் போது நீலிக் கண்ணீர் வடித்து கடந்து செல்லப் பார்க்கின்றனர். உரிய செயல் நடவடிக்கைகளில் இறங்கத் தயாராக இல்லை. இது தான் நிதர்சனம் என குறிப்பிடப்பட்டுள்ளது.