மீனவ மக்களின் அடையாளத்தை அழிக்கப் பார்க்கிறார் அமைச்சர் சந்திரசேகர்.!
அமைச்சர் சந்திரசேகரன் யாழ். மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல் அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து மீனவ மக்களின் அடையாளங்களை அழிக்க முற்படுவதாக முன்னாள் கடற்றொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இன்று சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்துக்கு ஒவ்வாத சீனக் கடல் அட்டை பண்ணைகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊக்குவிப்பது எமது கடற்றொழில் மக்களை கருவறுக்கம் செயற்பாடாக பார்க்கிறோம்.
இந்த செயற்பாட்டுக்கு பிரதேச செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது கவலையை உண்டு பண்ணுகிறது.
ஒரு பிரதேசத்தின் அரச காணிகளுக்கு அந்தப் பிரதேசத்தினுடைய பிரதேச செயலாளர் பொறுப்பாக இருக்கின்ற நிலையில் எமது கடலையும் அரச காணி போல் கையாள நினைக்கிறார்கள்.
எமது கடல் எமக்குச் சொந்தம் கடலை யாரும் பிரித்துக் கொடுக்க முடியாது. அவ்வாறாயின் கடலை பகிர்ந்து வழங்குவதற்கான அதிகாரத்தை யாரிடம் பெற்றார்கள் என கேட்க விரும்புகிறோம்.
ஒட்டுமொத்த மீனவ சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி தொழிலை இல்லாமல் ஒழிப்பதற்கு அமைச்சர் தலைமையில் மீளவும் அட்டை பண்ணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.
ஏனெனில் ஆட்சி அதிகாரம் இல்லாத காலத்தில் கடல் அட்டை பண்ணைக்கு எதிராக எம்மோடு குரல் கொடுத்த தற்போதைய மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர் தற்போது அட்டை பண்ணைகளை வாரி வழங்க முற்படுவது ஏன்.
மீனவ சமூகத்தின் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கிற பல பிரச்சினைகள் தொடர்பில் நாம் தெற்கை சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் கலந்துரையாடி அவர்களும் எமக்காக குரல் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.
குறிப்பாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற மீன்பிடி திருத்தச் சட்டம் முற்றாக நீக்கப்படுவதோடு இந்திய இழுவை மடி மீனவர்களின் அட்டகாசங்களுக்கு இராஜதந்திர ரீதியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேலும், மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பின்னோக்கி காணப்படுகின்ற நிலையில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானிய மண்ணெண்ணெய் விநியோகத்தை நிறுத்தி விலை குறைப்பு செய்யப்பட்ட மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து எமது கலந்துரையாடலை மேற்கொண்டோம்.
மாறி மாறி வந்த அரசாங்கங்கள் மீனவர் பிரச்சினை தொடர்பில் தேர்தல் காலங்களில் சாதகமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்த பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தாமை தொடர்பில் மீனவ சமூகம் போராட்டத்தின் மூலம் அவர்களின் கவனத்தை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம்.
ஆகவே, எமது மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் அடையாளத்தை அழிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் முனைவாராயின் அதற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.