மாணவர்களின் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கருத்தரங்கு.!
லிந்துலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி R.M.I.B. ரட்ணாயக்க அவர்களின் ஏற்பாட்டில், நு/ஆதித்தியா பாடசாலை அதிபர் P. அருள்ராஜன் தலைமையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கல்வி, மாணவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (17) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமன்றி, அவர்களின் பாதுகாப்பு, ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்த்தெடுப்பதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கருத்தரங்கில் உரையாற்றிய லிந்துலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி R.M.I.B. ரட்ணாயக்க அவர்கள், பாடசாலை வாழ்க்கை என்பது ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் மிக முக்கியமான காலப்பகுதி எனத் தெரிவித்தார்.
கல்வியின் பெறுமதியை உணர்ந்து, அரசாங்கம் கல்வித் துறைக்கு பல்வேறு வசதிகளையும் முதலீடுகளையும் செய்து வருவதால், மாணவர்கள் அந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுடன் கல்வியில் ஈடுபட வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள், நண்பர்கள் வட்டம் மற்றும் அன்றாட செயற்பாடுகளை தொடர்ந்து கவனித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். பொதுவாக பிள்ளைகள் தாயாரிடம் அதிக அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுவதைக் காண முடிகிறது. ஆனால், பல குடும்பங்களில் தந்தையர் வேலைப்பளு மற்றும் பிற பொறுப்புகள் காரணமாக பிள்ளைகளுடன் போதிய நேரத்தை செலவிடுவதில் குறைபாடு ஏற்படுகிறது.
இந்த இடைவெளியை குறைத்து, தந்தையரும் பிள்ளைகளுடன் அன்பாக உரையாடி, அவர்களின் பிரச்சினைகள், உணர்வுகள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்ளும் சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம். பெற்றோர் இருவரின் அன்பும் வழிகாட்டலும் கிடைக்கும் பிள்ளைகள் தன்னம்பிக்கையுடனும் நல்ல ஒழுக்கத்துடனும் வளர்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர், அறிமுகமற்ற நபர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுதல், அசௌகரியத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் உடனடியாக பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது பொலிஸாரிடம் தெரிவிக்கத் தயங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
இதேவேளை, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல்களை மதித்து பின்பற்றுவதன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பானதும் சிறப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் நற்பண்பு வளர்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயனுள்ள அறிவுரைகளையும் விழிப்புணர்வையும் வழங்கிய சிறப்பான நிகழ்வாக அமைந்தது.


