செய்தியை ஒளிபரப்பவில்லை என்பதற்காக ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் நகர சபை உறுப்பினர்!
மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தியை தேசிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்று ஒளிபரப்பு செய்யவில்லை என்பதற்காக குறித்த செய்தியை சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக அந்த கிராம மக்களிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு தளவாய் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் குறித்த செய்தியை தனது நிறுவனத்திற்கு அனுப்பியிருந்த நிலையில் அந்த செய்தி குறித்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று கூறி குறித்த தொலைக்காட்சி ஊடகவியலாளருக்கு எதிராக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன் கையெழுத்து திரட்டி வருவதுடன், குறித்த ஊடகவியலாளரை தொலைபேசியில் அச்சுறுத்தியும் உள்ளார்.
நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் நிலையில் எல்லா செய்திகளையும் தொலைக்காட்சி நிறுவனங்களால் ஒளிபரப்பு செய்ய முடியாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத நகரச சபை உறுப்பினர் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளருக்கு எதிராக கையெழுத்து திரட்டி வருவது குறித்து ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தங்களுக்கு ஏற்றால் போல் நடக்கவேண்டும் என்று நினைக்கும் அரசியல் வாதிகளால் தான் ஊடகவியலாளர்கள் கூடுதலான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இது குறித்து ஊடக நிறுவனங்களுக்கு புகாரளிக்கப்பட்டுள்ளன.