உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகள் நடும் விசேட நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மரங்களை நடுகை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு தற்போது மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. அவ்வாறு நடுகை செய்யப்படும் மரங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் எம்மிடையே ஏற்பட வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு ஏற்படுமாக இருந்தால் மாத்திரமே, உலக சுற்றாடல் தினத்தை நாம் கடைப்பிடிப்பதன் நோக்கத்தை ஓரளவாவது அடைந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட உமையாள்புரம் கிராம அலுவலர் பிரிவில் 300 மரக்கன்றுகளை நடும் விசேட நிகழ்வு இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. இந்த மாபெரும் மர நடுகைத் திட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் உமையாள்புரம் கிராம மக்கள் இணைந்து இந்தச் சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததுடன், ‘நிலா இம்பக்ட்’ நிறுவனத்தினர் இதற்கு அனுசரணை வழங்கியிருந்தனர். ‘மரங்களை அழிப்பது மனிதன் தன் சொந்தக் கைகளால் தன் சுவாசப் பையைச் சுருக்குவதற்குச் சமம்’ என்ற ஆழமான கருப்பொருளுடனும், ‘ஒரு மரம் ஆயிரம் நன்மைகள்’, ‘இன்று ஒரு மரம் நடுவோம், நாளை ஒரு உலகம் காப்போம்’ போன்ற விழிப்புணர்வுச் சிந்தனைகளை மையப்படுத்தியும் இந்த மர நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், ‘இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்: பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக’ என்பதாகும்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பசுமைச் சூழலை உருவாக்கல் என்பதே இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

நாம் இயற்கை வளங்களை அழிப்பதாலேயே இன்று மிகப் பெரிய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. எதிர்வுகூற முடியாத காலநிலைச் சூழலுக்குள் நாம் அனைவரும் சிக்கியுள்ளோம். எனவே, இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாப்பதும், பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவதும் எதிர்கால சந்ததியினருக்கு இந்தப் பூமியை வளமுள்ளதாக ஒப்படைப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும்,’ எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் அவர்கள், ‘எமது மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் காடழிப்பு என்பன தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. இவை எமது சூழலை அழிக்கும் பாரதூரமான செயற்பாடுகளாகும். எமது முன்னோர்கள் இந்த மண்ணைக் காக்கத் தமது உயிரையே அர்ப்பணித்தார்கள்; இந்த வளங்களைப் பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்டார்கள். நாம் இப்போது இந்த இயற்கை வளங்களைப் பாதுகாக்காவிட்டால், எமது எதிர்கால சந்ததிக்கு எதுவுமே மிஞ்சாது,’ எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாகப் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏ-9 பிரதான வீதியின் கரையோரங்களில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. மேலும், பரந்தன் நகரப் பகுதியில் சுற்றாடலைத் துப்புரவு செய்யும் மாபெரும் சிரமதான நடவடிக்கையும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த விசேட நிகழ்வில் கௌரவ ஆளுநருடன் இணைந்து, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அ.வேளமாலிகிதன், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவனருள்ராஜா, கிளிநொச்சி 553 பிரிகேட்டின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் முதுநாயக, ‘நிலா இம்பக்ட்’ நிறுவனத்தின் தலைவர் ஜெ.சிறிசங்கர் ஆகியோரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் உன்னத நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்றிட்டத்தில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் உமையாள்புரம் கிராம மக்கள் எனப் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0