எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் பாரிய ஊழல்;முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா பகிரங்கக் குற்றச்சாட்டு.!
மார்ச் மாதத்திற்குள் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை உயர்த்தியமை, பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளவில் நிலவும் போர்நிலையை விட, தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே இந்நெருக்கடிக்கான முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறினார்.
கடந்த காலங்களில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவியபோதிலும், சர்வதேசநிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும், அரசாங்கம் எரிபொருள் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அப்போது தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலைகளை உயர்த்துவதற்கு இடமளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது அரசாங்கம் திட்டமிட்டு மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாகவும், தனியார் நிறுவனங்களின் விலை நிர்ணயத்தில் தலையீடு செய்யாமல் பின்வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.சிங்கப்பூர் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற அமைச்சரின் கூற்று முற்றிலும் தவறானது எனவும், தரையிறக்கும் செலவுகள் உள்ளிட்டவை தவறாகக் காட்டப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
உலக சந்தை நிலவரத்தின்அடிப்படையில் இதைவிடக் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும் என்றும், கடந்த ஆறு மாதங்களாக நிலவி வரும் உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திடம் போதுமான திட்டமிடல் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், டொலர் மதிப்பு குறைவாகவே உயரும் என கூறப்பட்ட நிலையிலும், எரிபொருள் விலைகள் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளே தற்போதைய டீசல் நெருக்கடிக்குக் காரணம் எனவும், அதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல், அதன் சுமை பொதுமக்கள் மீது ஏற்றப்படுகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.