வாகனத் தரிப்பிட கட்டண அறவீடு; கொழும்பு மாநகரில் மீண்டும் அமுல்.!
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டண அறவீட்டு நடைமுறைகள், நாளை திங்கட்கிழமை முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது என்று கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.
சில நிர்வாக காரணங்களுக்காக கடந்த சில நாட்களாக கட்டணம் அறவிடும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், நாளை முதல் வழமை போன்று மாநகர சபையின் அங்கீகாரம் பெற்ற உத்தியோகத்தர்களால் கட்டணங்கள் அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிப்பிடக் கட்டணங்களைச் செலுத்தத் தவறுபவர்கள் மற்றும் உரிய தரிப்பிட விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, கொழும்பு நகருக்குள் வாகனங்களை நிறுத்தும் வாகனச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள், மாநகர சபையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.