உற்பத்திப் பொருட்களுக்குரிய நியாயமான விலை கிடைக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்!
உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்; இடைத்தரகர்கள் அதிக லாபம் பெறும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். உற்பத்தியாளர்களுக்கே நியாயமான வருமானம் கிடைக்கும் போதே வடக்கு மாகாணம் முழுமையாகத் தன்னிறைவு அடைய முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
‘வடக்கிற்கான தொழில்துறைகள் மன்றத்தின்’ வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (21) யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில், மன்றத் தலைவர் எஸ். நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், தொழில்துறைகளின் நிலையான அபிவிருத்தி இல்லாமல் மாகாண முன்னேற்றம் சாத்தியமில்லை என்றும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் ஏற்றுமதி நோக்கில் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அதற்கான ஊக்கத்தை அரசு வழங்க வேண்டும் என்றும், அரச திணைக்களங்களின் அணுகுமுறைகளில் மேலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார்.
நிதி ஒதுக்கீடுகள் குறித்து கருத்து தெரிவித்த ஆளுநர், போருக்குப் பிந்தைய காலத்தில் தொழில்முயற்சிகள் வளர்ச்சி கண்டுள்ள போதிலும், கடன் வசதிகளைப் பெறுவதில் இன்னமும் சவால்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். ‘முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் வழங்கப்படும் கடன் திட்டங்களில் வடக்கு மாகாண தொழில்முயற்சியாளர்கள் பின்னடைவைச் சந்திக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
இதற்கான தீர்வாக, வடக்கு மாகாணத்திற்கென தனி கடன் ஒதுக்கீடு கோரப்படவுள்ளதாகவும், தேவையான ஆவணங்களைத் தயாரிக்க பல்கலைக்கழகங்களின் ஊடாக உதவி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இந்தியாவிலிருந்துவடக்கு மாகாணத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறினார்.
கொழும்பு – யாழ்ப்பாண பயண நேரத்தை குறைப்பது அவசியம் எனவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்நாட்டு பயண முனையம் அமைப்பது தொடர்பாக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கொக்கிளாய் – புல்மோட்டை பாலத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முதலீட்டாளர்களுக்கு தேவையான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் “ஒற்றை சாளரம் முறை” (Single Window System) அறிமுகப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இந்திய துணைத் தூதரகத்தின் பிரதிநிதிகள், அரச திணைக்கள அதிகாரிகள், வங்கி அதிகாரிகள்,தொழில்முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.