வேல்முருகு ஆசிரியரின் 38வது நினைவு தினம் பாண்டிருப்பில் அனுஷ்டிப்பு.!
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் ஆ. கந்தையா (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின் 38வது நினைவு தினம் இன்று அவரது சொந்த ஊரான கல்முனை பாண்டிருப்பில் அனுசரிக்கப்பட்டது.
அவரது மனைவி, மகள் தமிழ்ச்செல்வி மற்றும் பேரப்பிள்ளைகள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, “வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பு” ஒருங்கிணைப்பில், அதன் மாவட்ட பொறுப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதிபன் தலைமையில் நடைபெற்றது.
1988 மார்ச் 20ஆம் திகதி ஒட்டுக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட வேல்முருகு ஆசிரியர், அம்பாறை மாவட்ட மக்களின் உரிமைக்காக பல்வேறு துறைகளில் செயல்பட்ட முக்கியப் பொதுநலப் போராளியாகக் கருதப்படுகிறார்.
நினைவு நிகழ்வு பாண்டிருப்பு கடற்கரை வீதியில் அமைந்துள்ள மகாவிஷ்ணு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலிசெலுத்தப்பட்டதுடன், ஈகைச் சுடரும் ஏற்றப்பட்டது.
அவரது மனைவி முதலில் சுடரை ஏற்றியதையடுத்து, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் உள்ளிட்டோர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் போது, வேல்முருகு ஆசிரியரின் சேவைகள் குறித்து பலர் கருத்துரைத்ததுடன், அவரது பெயரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை மறுசீரமைத்தல், கல்வி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தல், அவரது திருவுருவச் சிலையை நிறுவுதல் மற்றும் அவரது வாழ்க்கையைப் பற்றிய ஆய்வு நூலை வெளியிடுதல் உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மயிலம்பாவெளி வாழும்கலை ஆசிரமம் மற்றும் திருப்பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லங்களிலும் உணவு வழங்கப்பட்டது.
