கல்கிஸையில் விசேட சோதனை: ஆயுதங்களுடன் 15 சந்தேகநபர்கள் கைது.!
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் வழிகாட்டுதலின் கீழ் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 15 பேர் விசேட அதிரடிச் சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில், கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள அரலிய வீடமைப்புத் தொகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 5 கூர்மையான ஆயுதங்களும், சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள்கடத்தலில் ஈடுபட்டு வரும் ‘அல்டோ தர்மே’ என அழைக்கப்படும் எல்லாவல தர்மசிறி பெரேரா மற்றும் ‘சந்தோ’ என அறியப்படும் கவிந்து தனஞ்சய ஆகியோரின் குழுவுடன் தொடர்புடைய 11 பேரும், மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.