வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத இருசக்கர வாகன இயந்திரங்கள் இறக்குமதி – வர்த்தகர் கைது.!
நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினர்கள், வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகன இயந்திரங்களை நாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்த ஒரு வர்த்தகரை நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சுமார் ₹1 கோடி மதிப்பிலான 31 இருசக்கர வாகன இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகேகொடை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் முதலில் 16 இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் பிறகு வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நுணுக்கமாக மறைத்திருந்த 15 இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, இந்தஇயந்திரங்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்து பின்னர் முழுமையான இருசக்கர வாகனங்களாக மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்திருந்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.