சட்டம் தனிப்பட்ட விருப்பங்களின் கட்டுப்பாட்டில் – சஞ்சீவ எதிரிமான்ன குற்றச்சாட்டு.!
இலங்கையில் சட்டம் தற்போது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் கீழ் செயல்படுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம்சாட்டியுள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், விசாரணை அதிகாரிகள் அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
கபில சந்திரசேன வழங்கியதாகக் கூறப்படும் சத்தியக்கடதாசியை ஆதாரமாகக் குறிப்பிட்ட அவர், விசாரணையின் போது அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இத்தகைய செயல்பாடுகள் சட்டத்தின் நம்பகத்தன்மையை பாதிப்பதோடு, நீதித்துறைக்கு கடுமையான சவாலாக அமைவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விசாரணை அழுத்தங்களின் காரணமாக ஏற்பட்டதாகக்கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் அவசியம் என வலியுறுத்திய அவர், சட்டத்தின் ஆட்சியையும் சமூக நீதியையும் பாதுகாக்க இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.